ரஷ்யாவால்... ஜேர்மனி போன்று பிரித்தானியாவும் எடுக்கவிருக்கும் முடிவு: எச்சரிக்கும் நிபுணர்கள்
ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அளித்துவரும் நெருக்கடியால் ஜேர்மனி போன்று பிரித்தானியாவும் எரிசக்தியை சேமிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், தெரு விளக்குகள் மங்கலாம் அல்லது அணைக்கப்படலாம், மேலும் மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக அரசாங்க கட்டிடங்களில் வெப்பமூட்டும் பயன்பாடு குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் ஜேர்மனியின் பெர்லின் நகரில் கதீட்ரல், பழைய அரண்மனை மற்றும் சார்லோட்டன்பர்க் அரண்மனை உட்பட சுமார் 200 வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் நகராட்சி கட்டிடங்களில் இரவில் விளக்குகளை அணைக்கும் நடவடிக்கை அமுலுக்கு கொண்டுவந்துள்ளனர்.
பெர்லின் மட்டுமின்றி ஹனோவர் நகரிலும் அங்குள்ள நிர்வாகம் இதே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது பிரித்தானியாவும் அதே பாணியை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிபுணர்கள் தரப்பில் வலுப்பெற்றுள்ளது.
மட்டுமின்றி, அன்றாடச் செலவீனங்கள் பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குளிர் காலத்தில் எரிசக்தி பற்றாக்குறையால் தேவையற்ற இழப்புகளை தவிர்க்க, தற்போதே நடவடிக்கைகளை முன்னெடுத்து எரிசக்தியை சேமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.