வாழ்க்கை செலவு நெருக்கடி...1.5 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி: பிரித்தானிய அரசு அதிரடி!
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை சமாளிப்பதற்காக 1.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள புதிய உதவி தொகுப்பை அந்த நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக் இன்று அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் உணவு, எரிசக்தி கட்டணம் மற்றும் 40 ஆண்டுகளுக்கு பிறகான பணவீக்கம் போன்றவை பிரித்தானியாவில் வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது.
இந்தநிலையில் பிரித்தானிய மக்களுக்கு உதவும் வகையில், பிரித்தானிய அரசாங்கம் 1.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் உள்ள புதிய உதவி தொகுப்பினை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், இந்த அக்டோபரில் இருந்து பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அவர்களது எரிசக்தி கட்டணங்களில் 400 பவுண்டுகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏழ்மையான குடும்பங்களின் வாழ்க்கை செலவிற்கு உதவும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 8 மில்லியன் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 650 பவுண்டுகள் இரண்டு தவணையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு தனியாக 300 பவுண்டுகளும், ஊனமுற்றோர் நலன்களை பெறும் தனிநபர்களுக்கு 150 பவுண்டுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை செலவுகளானது, எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் லாபத்தின் மீதான 25% விண்ட்ஃபால் வரியின் முலம் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கைது செய்யப்பட்ட நவ-நாஜிக் ஆதரவாளரின் வீட்டில் இருந்து...பயங்கர துப்பாக்கிகள் பறிமுதல்!
இந்த புதிய உதவித் தொகுப்பு நடவடிக்கை குறித்து நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்த கருத்தில், நாட்டின் உயர் பணவீக்கத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவுவதில் அரசாங்கத்திற்கு முக்கிய பங்கு மற்றும் மிகப்பெரிய கூட்டுப் பொறுப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.