Wolf விருதை வென்ற தமிழ் வம்சாவளி விஞ்ஞானி சங்கர் சுப்ரமணியன்
uk tamil shankar-balasubramanian won wolf award for chemistry: பிரித்தானியாவில் வசித்து வரும் தமிழ் வம்சாவளி விஞ்ஞானியான சங்கர் சுப்ரமணியன் 2026 ஆம் ஆண்டுக்கான வேதியியல் பிரிவில் Wolf விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Wolf விருது
இஸ்ரேலை சேர்ந்த Wolf Foundation, ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை , வேதியியல் , கணிதம் , மருத்துவம் , இயற்பியல் மற்றும் கலை ஆகிய 6 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது.
இதன் வேதியலுக்கான விருது, சர்வதேச அளவில் நோபலுக்கு அடுத்த உயரிய விருதாக கருதப்படுகிறது.

2026 ஆம் ஆண்டுக்கான வேதியியல் பிரிவில் Wolf விருதுக்கு தமிழ்நாட்டில் பிறந்த விஞ்ஞானியான சங்கர் சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த தலைமுறை டிஎன்ஏ வரிசைப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக சங்கர் சுப்ரமணியன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் சக விஞ்ஞானிகளான டேவிட் கிளெனர்மேன் மற்றும் பாஸ்கல் மேயர் ஆகியோருடன் இந்த விருதை பகிர்ந்து கொள்ள உள்ளார்.
டிஎன்ஏ வரிசைப்படுத்தல்
இந்த மூவரின் பணி, மரபணுத் தகவல்களைப் பகுப்பாய்வு செய்யும் அளவையும் வேகத்தையும் மாற்றியமைக்க உதவியதுடன், டிஎன்ஏ வரிசைப்படுத்தலை மரபணு மருத்துவத்திற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாற்றியதாக கூறப்படுகிறது.
இவர்களின் பணியிலிருந்து உருவாக்கப்பட்ட வரிசைப்படுத்தல் தளம், தற்போது உலகளவில் உருவாக்கப்படும் 90 சதவீதத்திற்கும் அதிகமான வரிசைப்படுத்தல் தரவுகளுக்கு அடிப்படையாக விளங்குகிறது.

மேலும், இவர்களின் வரிசைப்படுத்தல் அணுகுமுறை, வரிசைப்படுத்தல் வேகத்தை 10 லட்சம் மடங்கு அதிகரிக்க உதவியதுடன், செலவுகளையும் கணிசமாகக் குறைத்தது.
இதன்மூலம், ஒரு மனித மரபணுத்தொகுதியை வரிசைப்படுத்துவதற்கான செலவு 200 டொலருக்கும் குறைவாக வர உதவியது.
சங்கர் சுப்ரமணியன்
சென்னையில் பிறந்த 60 வயதான சங்கர் சுப்ரமணியன், தனது 1 வயதிலே பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு புலம் பெயர்த்துள்ளார்.

சங்கர் சுப்ரமணியன் தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியலின் ஹெர்ஷல் ஸ்மித் பேராசிரியராகவும், கேன்சர் ரிசர்ச் யுகே கேம்பிரிட்ஜ் நிறுவனத்தில் ஒரு மூத்த குழுத் தலைவராகவும் உள்ளார்.
2017 ஆம் ஆண்டில் 'நைட்' பட்டம் வென்ற அவர், உயிர் அறிவியலுக்கான ராயல் பதக்கம், மில்லினியம் தொழில்நுட்பப் பரிசு மற்றும் பிரேக்த்ரூ பரிசு ஆகிய பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.