"குழந்தையை கொலை செய்வது எப்படி?" Google-ல் தேடிய கொடூரனுக்கு கடும் தண்டனை விதிப்பு..
பிரித்தானியாவில் பிறந்து 3 வாரங்களே ஆன குழந்தையை பாலில் மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஜமர் பெய்லி (Jamar Bailey) எனும் 21 வயது இளைஞன், கடந்த 2020 ஜூன் 27-ஆம் திகதி, பிறந்து 3 வாரங்களே ஆன குழைந்தைக்கு, பால் போத்தலில் மருந்து ஒன்றை கலந்து கொடுத்துள்ளார்.
குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது, மற்றும் அந்த அழுகை வித்தியாசமாகத் தெரிந்ததால், அவளது தாய் 111ஐ அழைத்துள்ளார்.
சில நிமிடங்களில் அந்த குழந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டு எந்த அசைவும் இன்றி கிடந்தது. அவசர உதவிக்கு அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குழந்தை பிர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
குழந்தையின் சிறுநீர் பரிசோதனையில், சோடியம் வால்போரேட் (sodium valporate) எனும் மருந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த மருந்து கை- கால் வலிப்பு மற்றும் இருமுனைக் கோளாறுக்கு (bipolar disorder) சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தாகும். இது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஆபத்தானது.
இந்த மருந்தை 3 வாரங்களே ஆன ஒரு குழந்தை தற்செயலாக உட்கொண்டிருக்க முடியாது என்பதால் மருத்துவமனையிலிருந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பொலிஸார் ஆய்வு செய்ததில் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன மற்றும் நச்சுயியல் (toxicology) சோதனைகள் குழந்தையின் பால் போத்தலில் மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பறிவார்கள் Jamar Bailey-ன் வீட்டை ஆய்வு செய்ததில், அவர் தனது பெயரில் மருந்து சீட்டு ஒன்றை கண்டுபிடித்தனர். அதில், sodium valproate கொண்ட வலிப்புத்தாக்கங்களுக்கு உட்கொள்ளப்படும் மருந்து இருந்தது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, அவரது செல்போனில் "ஒரு குழந்தைக்கு எப்படி விஷம் கொடுப்பது" மற்றும் "பிறந்த குழந்தையை எப்படி கொல்வது" என்பதற்கான தேடல் வரலாற்றையும் துப்பறிவாளர்கள் கண்டுபிடித்தனர். பின்னர், Bailey கைது செய்யப்பட்ட விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், திங்கட்கிழமை இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டு Bailey-க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருந்த அந்த பாதிக்கப்பட்ட பெண் குழந்தை, சில நாட்களில் குணமடைந்து தாயுடன் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.