குற்றம் செய்து தண்டனை அனுபவித்தவர்கள் இனி இதெல்லாம் செய்ய முடியாது: பிரித்தானியாவில் கடுமையாகும் சட்டங்கள்
பிரித்தானியாவில், ஏதாவது குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள், அவர்களுடைய தண்டனைக்காலம் முடிவடைந்து விடுவிக்கப்பட்ட நிலையிலும், இனி குறிப்பிட்ட விடயங்களை சாதாரணமாக செய்ய முடியாத வகையில் சட்டங்களை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுவருகிறது.
இனி இதெல்லாம் செய்ய அனுமதி கிடையாது
ஆம், தண்டனை அனுபவித்தவர்கள், இனி மதுபான விடுதிகளுக்குச் செல்லவும், விளையாட்டுப் போட்டிகளைக் காண விளையாட்டு மைதானங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட உள்ளது.
தற்போதைய சட்டப்படி, விளையாட்டு மைதானம் ஒன்றில் வன்முறையில் ஈடுபட்ட ஒருவர், தனது தண்டனைக் காலத்துக்குப் பிறகும் விளையாட்டு மைதானங்களுக்கு செல்வதற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்கமுடியும்.
ஆனால், இனி அப்படி குறிப்பிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு குறிப்பிட்ட தடை என்று இல்லாமல், மொத்தத்தில் தண்டனை அனுபவித்தவர் என்றாலே அவர் மதுபான விடுதிகளுக்குச் செல்லவும் விளையாட்டுப் போட்டிகளைக் காண விளையாட்டு மைதானங்களுக்குச் செல்லவும் அனுமதி கிடையாது என்னும் வகையில் சட்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அடுத்த மாதம் அறிமுகமாக இருக்கும் அந்த சட்டத்தின்படி, குற்றவாளிகள் வாகனம் ஓட்டவும், பயணம் செய்யவும் கூட தடை விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
அத்துடன், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பவர்கள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்களா என்பதை அறியும் சோதனைகளை அதிகாரிகள் மேற்கொள்ள முடியும், அவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயலில் ஈடுபடாதவர்களாக இருந்தால் கூட!
குற்றச் செயல்களில் ஈடுபட்டோர், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக இப்படி ஒரு சட்டமாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
மேலும், சிறைத்தண்டனை அனுபவித்துவருபவர்கள், நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்படுவது தொடர்பான விதிகளும் கடுமையாக்கப்பட உள்ளதாக நீதித்துறை செயலரான ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |