இராணுவத்தால் தீ விபத்து... வெளிநாடொன்றிற்கு இழப்பீடு வழங்க பிரித்தானியா ஒப்புதல்
கென்ய வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு 2.9 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு வழங்க பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளது.
கூட்டுப் பயிற்சி
கடந்த 2021 இல் பிரித்தானிய இராணுவப் பயிற்சியால் ஏற்பட்ட தீ விபத்துக்காக இந்த இழப்பீடு என தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா மற்றும் கென்ய இராணுவம் இணைந்து வடக்கு லைக்கிபியா பகுதியில் கூட்டுப் பயிற்சிகளை நடத்திய நிலையில் அருகிலுள்ள லோல்டைகாவில் தீ விபத்து ஏற்பட்டது.
2021 மார்ச் மாதம் நடந்த இச்சம்பவத்தில் தற்போது தீர்வை எட்டியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் அனுப்பியுள்ளதாகவும் சட்டத்தரணி கெல்வின் குபாய் தெரிவித்துள்ளார்.
மேலும், தீ விபத்தால் ஏற்பட்ட புகை காரணமாக 7,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக குபாய் தெரிவித்துள்ளார். லோல்டைகா பகுதியில் வசிப்பவர்கள், பிரித்தானிய இராணுவப் பயிற்சிப் பிரிவுதான் தீயை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.
பொறுப்பேற்பதாக
இந்த காட்டுத்தீ இயற்கை காப்பகத்தின் பெரும்பகுதியை அழித்தது. மட்டுமின்றி, இராணுவத்தினர் விட்டுச்சென்ற வெடிப்பொருட்களால் அப்பகுதி மக்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் பின்னர் ஒரு பிரித்தானிய வீரர் சமூக ஊடகப் பதிவில் காட்டுத்தீயைத் தொடங்கியதற்குப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திகைத்துப் போனதாகக் கூறி, ராயல் இராணுவ காவல்துறையினரால் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |