இன்னும் சில மணிநேரங்கள் தான்... ஆப்கானிஸ்தான் தொடர்பில் பிரித்தானியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை இன்னும் 'சில மணிநேரங்களில்' முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 31ம் திகதியோடுஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற வேண்டும் என தலிபான்கள் எச்சரித்துள்ள நிலையில், மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அமெரிக்க, பிரித்தானியா உட்பட வெளிநாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து நோர்வே, அவுஸ்திரேலியா, ஸ்பெயின் உட்பட பல நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவதை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
தற்போது, அந்த வரிசையில் இன்னும் சில மணிநேரங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதை முடிவுக்கு கொண்டுவர உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறியதாவது, தற்போது எங்களுடன் விமான நிலையத்திற்குள் அழைத்து வந்தவர்களை வெளியேற்றும் பணிகளை நாங்கள் மேற்கொள்வோம்.
ஏறக்குறைய 1,000 பேர் இப்போது விமானநிலையத்திற்குள் உள்ளனர். கூட்டத்திலிருந்து இன்னும் ஒரு சிலரை மீடக்க நாங்கள் முயற்சி செய்வோம், ஆனால் ஒட்டுமொத்தமாக முக்கிய பணிகள் இப்போது முடிவடைந்துவிட்டது.
இன்னும் சில மணிநேரங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் முடிவுக்கு கொண்டுவரப்படும்.
பிரித்தானியா வெளியேற்றத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 14,000 பிரித்தானிய குடிமக்கள் மற்றும் ஆப்கானியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார்.