பிரித்தானியா வரும் மேக்ரான் தம்பதியர்: வழக்கத்துக்கு மாறாக காத்திருக்கும் சிறப்பு வரவேற்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும், அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரானும் அடுத்தவாரம் பிரித்தானியாவுக்கு வருகை புரிய இருக்கும் நிலையில், வழக்கத்துக்கு மாறாக அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பிரித்தானியா வரும் மேக்ரான் தம்பதியர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது மனைவியும் அடுத்த வாரம், அதாவது, ஜூலை மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பிரித்தானியாவில் செலவிட இருக்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், அவர்களுக்கு, வழக்கத்துக்கு மாறான வரவேற்பு காத்திருக்கிறது.
அதாவது, பொதுவாக பிரித்தானியாவுக்கு வருகை புரியும் தலைவர்களுக்கு பக்கிங்காம் அரண்மனையில்தான் வரவேற்பு அளிக்கப்படும்.
ஆனால், இம்முறை மேக்ரான் தம்பதியருக்கு விண்ட்சர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பக்கிங்காம் மாளிகையில் பராமரிப்புப் பணிகள் நடப்பது அதற்கு ஒரு காரணம் என்றாலும், வழக்கத்துக்கு மாறாக பல விடயங்கள் இம்முறை நடைபெற உள்ளன.
முதலில், பிரித்தானியாவின் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியமும் அவரது மனைவியான இளவரசி கேட்டும், Northolt என்னுமிடத்தில் அமைந்துள்ள விமானப்படை விமான தளத்துக்கே சென்று மேக்ரான் தம்பதியரை வரவேற்க இருக்கிறார்கள்.
அங்கிருந்து, மேக்ரான் தம்பதியரை வில்லியமும் கேட்டும் விண்ட்சரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு மேடைக்கு அழைத்துவர, அங்கு அவர்களுக்காக காத்திருக்கும் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா மேக்ரான் தம்பதியரை வரவேற்க, அங்கு அவர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பளிக்கப்படும்.
அடுத்ததாக, அங்கிருந்து சாலை வழியாக மேக்ரான் தம்பதியர் ரதத்தில் விண்ட்சர் மாளிகைக்கு அழைத்துவரப்படுவார்கள்.
அது மட்டுமின்றி, மகாராணி எலிசபெத்துக்கு மேக்ரான் பரிசாக அளித்த குதிரையை பார்வையிடுவது முதல் பல சிறப்பு நிகழ்ச்சிகளில் மேக்ரான் தம்பதியர் கலந்துகொள்ள இருப்பதுடன், தனிப்பட்ட முறையில், புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாராணியாரின் கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தவும் இருக்கிறார்கள்.
மன்னர் குடும்பம், இப்படி அன்புடன் உலகத் தலைவர்களை வரவேற்று உபசரிப்பதன் மூலம், பிரித்தானியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |