சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் பிரித்தானியா
பிரித்தானியாவில், பிரதமர் தனது பதவியில் நீடிப்பாரா இல்லையா என்பதை முடிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள காரணியாக மாறியுள்ளது புலம்பெயர்தல்.
ஆகவே, லேபர் அரசும் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
எல்லை பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் பிரித்தானியா
அவ்வகையில், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளை பால்கன் நாடுகளுக்கு அனுப்பியுள்ளது பிரித்தானியா.
பால்கன் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பு ஏஜன்சியான Frontexஉடன் இணைந்து ஆட்கடத்தல் கும்பல்களை ட்ராக் செய்து, கைது செய்வதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்குவார்கள்.
அதற்காக, பிரித்தானிய அதிகாரிகள் பால்கன் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ட்ரோன்கள் மற்றும் இரவு நேரத்தில் இருளில் பார்க்கப் பயன்படுத்தும் கண்ணாடிகளையும் கொடுக்க இருக்கிறார்கள்.
மேலும், ஆட்கடத்தல்காரர்களைக் கண்காணிப்பதற்கு பிரித்தானிய தயாரிப்பான ட்ரோன்களை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பிரித்தானிய அதிகாரிகள் பால்கன் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும் இருக்கிறார்கள்.

புலம்பெயர்தல் தொடர்பில் பிரித்தானியா அறிமுகம் செய்யும் மற்றொரு விதி: சர்வதேச மாணவர்கள் மீது குறிவைப்பு
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக ஒத்துழைக்கும் நோக்கில் நடைபெற்ற உச்சி மாநாடு ஒன்றில், பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், மேற்கு பால்கன் நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் உள்துறைச் செயலர்களை சந்தித்தார்.
அதுகுறித்து பேசிய அவர், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் வழிகளை கட்டுப்படுத்துவதற்காக மேற்கு பால்கன் நாடுகளில் பிரித்தானிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது வரையிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரித்தானிய சட்ட அமலாக்க அமைப்பை அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
நமது எல்லைகளைப் பாதுகாக்க, என்னாலியன்ற அனைத்தையும் செய்வேன் என உறுதியளித்துள்ளேன், அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறேன் என்றும் கூறினார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |