தற்கொலை தாக்குதலுக்கு முன் காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிய பிரித்தானியா தான் காரணம்! வெளிச்சத்திற்கு வந்த பரபரப்பு தகவல்
காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.(கே) நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் அபே நுழைவுவாயில் அருகே மக்கள் குவிய பிரித்தாினயா அதிகாரிகள் தான் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தின் அபே நுழைவுவாயிலுக்கு முன் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இரண்டு பிரிட்டிஷ் குடிமக்கள் உட்பட கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த வாரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன் காபூலின் சர்வதேச விமான நிலையத்தின் அபே நுழைவாயிலுக்குச் செல்லுமாறு பிரிட்டிஷ் தூதரகம் ஆப்கானியர்களிடம் கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.
விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்கா எச்சரித்திருந்த போதிலும், அபே நுழைவாயிலை பயன்படுத்துமாறு மக்களுக்கு பிரிட்டிஷ் தூதரகம் அனுப்பிய மின்னஞ்சல்களைப் பார்த்ததாக பிபிசி கூறியது.
அதேசமயம், தாக்குதல் நடந்த நாளன்று அதிகாரப்பூர்வ பிரித்தானியா ஆலோசனை, குழப்பமாகவும் முரண்பாடாகவும் இருந்தது என ஆப்கானியர் ஒருவர் கூறினார்.
தாக்குதலுக்கு நடப்பதற்கு முந்தைய நாள், அதாவது கடந்த புதன்கிழமை, காபூல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் யாரும் விமான நிலையத்திற்கு வரக்கூடாது என பிரித்தானியா வெளியுறவுத்துறை அலுவலகம் அதன் ஆலோசனையை புதுப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது தற்கொலை தாக்குதலுக்கு முன்னர் அபே நுழைவுவாயிலுக்கு முன் மக்கள் குவிய பிரித்தாினயா அதிகாரிகள் தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.