பஸ் ஸ்டாப்பில் குப்பைப்போல் கிடந்த இராணுவ ரகசிய ஆவணங்கள்! பிரித்தானியாவில் பரபரப்பு
பிரித்தானியாவில், கென்ட் மாகாணத்தில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் ரகசிய ஆவணங்கள் குப்பைப் போல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஐம்பது பக்க ஆவணத்தில், எச்.எம்.எஸ் டிஃபென்டர் போர்க்கப்பல் (HMS Defender) மற்றும் பிரித்தானிய இராணுவம் பற்றிய விவரங்கள் உள்ளன.
மேலும், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பிரித்தானிய-அமெரிக்க பாதுகாப்பு உரையாடலில் இருந்து ஆயுத ஏற்றுமதி மற்றும் குறிப்புகள் பற்றிய புதுப்பிப்புகளும் இந்த ரகசிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.
அதில், கிரிமியா கடற்கரையிலிருந்து உக்ரேனிய கடல் வழியாக கப்பல் செல்வதற்கு, ரஷ்யா 'ஆக்ரோஷமாக' பதிலளிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கணித்ததாகவும், ஆனால் இன்னும் முன்னேற முடிவு செய்ததும் தெளிவாக குறிப்பிடிடப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நடவடிக்கை முடிந்ததும் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து இராணுவ இருப்புக்கான சாத்தியமான திட்டங்கள் உள்ளடக்கிய மற்ற பக்கங்களும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
ஆவணங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒரு நபர், பிபிசி-க்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், உயர் ரகசிய இராணுவ ஆவணங்கள் எப்படி பேருந்து நிலையத்தின் அருகே கிடந்தது என்பது குறித்து பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது.