சிவப்பு பட்டியலில் பயனில்லை! சஜித் ஜாவித் வெளியிட்ட திடீர் அறிவிப்பு
பிரித்தானியாவின் பயண 'சிவப்பு பட்டியலில்' இருந்து அனைத்து நாடுகளும் நீக்கப்படுவதாக சுகாதார செயலாளர் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 15, புதன்கிழமை, உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிமுதல், அனைத்து 11 நாடுகளும் பிரித்தானியாவின் பயண சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.
இது குறித்து சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறுகையில், Omicron தொற்று பிரித்தானியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவிவருவதால், இந்த சிவப்பு பட்டியலை பின்பற்றுவது என்பது அவ்வளவு பலனளிக்கவில்லை என்று கூறினார்.
'எனவே சர்வதேச பயணத்திற்கான எங்கள் தற்காலிக சோதனை நடவடிக்கைகளை நாங்கள் பராமரிக்கும் அதே வேளையில், நாளை அதிகாலை 4 மணி முதல் அனைத்து 11 நாடுகளையும் பயண சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவோம் என்பதை என்னால் இன்று அறிவிக்க முடியும்' என்று கூறினார்.
இதன் பொருள் தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, ஜாம்பியா, அங்கோலா, போட்ஸ்வானா, எஸ்வதினி, லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 11 நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வருபவர்கள் இனி 11 நாட்களுக்கு 2,285 பவுண்ட்கள் செலவில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படத் தேவையில்லை.
இருப்பினும், மாற்றங்களுக்கு முன் வருபவர்கள் கிறிஸ்துமஸ் நாள் வரை தங்கள் சொந்த செலவில் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
Omicron எனும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு பற்றிய செய்தி வெளிவந்தவுடன், கடந்த மாதம் பிரித்தானியாவில் சிவப்பு பட்டியல் மீண்டும் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், இந்த பயண கட்டுப்பாடுகள் Omicron வைரஸ் நாட்டிற்குள் வருவதைத் தடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, இப்போது 4,000-க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுவிட்டனர்.