சூடானில் எந்த நேரத்திலும் பிரித்தானிய ராணுவம் களமிறங்கலாம்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்
சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்க இங்கிலாந்து துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காத்திருக்கும் பிரித்தானிய ராணுவம்
இராணுவத்தினர் சூடானில் உள்ள கார்ட்டூமில் செல்வதற்கான உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. சூடானில் வெடித்துள்ள உள்நாட்டுப் போரில் இதுவரை 400 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தற்போதைய சூழலில் பிரித்தானிய துருப்புகளை சூடானுக்கு அனுப்புவது என்பது விவேகமான திட்டமிடலுடன் இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2021 காபூல் நடவடிக்கைக்கு பிறகு மிகப்பெரிய வெளியேற்றும் நடவடிக்கை என்பதால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான RAF C-17 போக்குவரத்து விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.
@AFP
இதனிடையே, சூடானில் உள்ள பிரித்தானிய மக்கள் தங்கள் விவரங்களை இணையமூடாக பதிவு செய்யுமாறு பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
பயண ஆலோசனையைப் பின்பற்றவும்
மேலும், பிரித்தானிய பிரஜைகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதுடன், மேலதிக தகவல்களுக்காக தங்கள் பயண ஆலோசனையைப் பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முன்னதாக, திங்களன்று கார்ட்டூமில் அமெரிக்கத் தூதரக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, Djbouti-ல் உள்ள அவர்களின் முகாம் லெமோனியர் தளத்திற்கு கூடுதல் படைகளை அனுப்ப பென்டகன் உத்தரவிட்டது.
ரமலான் நாள் போர் நிறுத்தம் ஒரு பாதுகாப்பு வாய்ப்பை வழங்கும் என்றே அதிகாரிகள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், சூடானில் குறிப்பிட்ட பகுதிகளில் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்படுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான இரட்டைக்குடியுரிமை கொண்ட பிரித்தானியா மற்றும் சூடான் மக்கள் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கார்ட்டூம் மற்றும் மேற்கு டார்பூர் பகுதியில் கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையேயான போர் தொடங்கிய பின்னர் 20,000 பேர்கள் வரை அண்டை நாடான சாட் நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.