நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா - பலத்த பாதுகாப்புடன் இலங்கை சுற்றுலா தலம்
அறுகம்பை கடற்கரைப் பகுதியில் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள சமீபத்திய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை சுட்டிக்காட்டி, மறு அறிவித்தல் வரும்வரை அப்பகுதியை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள கடுமையான ஆபத்து காரணமாக, தூதரகம் அறுகம் பேக்கான தூதரக பணியாளர்களுக்கு உடனடியாக மறு அறிவிப்பு வரும் வரை பயணக் கட்டுப்பாட்டை விதித்தது.
பலத்த பாதுகாப்பில் அறுகம்பை...
இதேவேளை, அறுகம்பை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் எடுத்துள்ளனர்.
அறுகம் பே சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வு அமைப்புகளும் ஏனைய பாதுகாப்புப் படையினரும் பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அறுகம் பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யும் பிரபலமான இடங்கள் இருப்பதன் காரணமாக இஸ்ரேலியர்கள் அடிக்கடி அங்கு செல்வதாகவும், அண்மைக்காலமாக கிடைத்த தகவல்கள் அவர்களை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெளிவுபடுத்தினார்.
எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா
மேலும் நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இதுவரையில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும், பொதுமக்கள் எத்தகைய அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பிரித்தானியாவும் இது குறித்து தங்களது உத்தியோகப்பூர்வ தளத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |