அதிக போதையில் வேன் ஓட்டியதால் 3 வயது சிறுமி பலி: குற்றத்தை ஒப்புக் கொண்ட சாரதி!
பிரித்தானியாவில் நடந்த விபத்தில் 3 வயது சிறுமி பலியான நிலையில், அதிக போதையில் வேன் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக சாரதி ஒப்புக் கொண்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட சாரதி
மான்செஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில், வேன் சாரதி ராவல் ரெஹ்மான் (Rawal Rehman, 35) என்பவர் போதை தலைக்கேறிய நிலையில் வாகனம் ஓட்டி மூன்று வயது சிறுமி லூயிசா "லுலு" பால்மிசானோவை(Louisa "Lulu" Palmisano) மோதி கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இந்த துயரமான சம்பவம் கடந்த பிப்ரவரி 22ஆம் திகதி மோசலி தெருவில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்தது எப்படி?
லம்ப்டன்(Lambton) சாலையில் வசித்து வரும் ரெஹ்மான், தனது மெர்சிடிஸ் ஸ்பிரிண்டர் வேனை ஆபத்தான முறையில் ஓட்டியுள்ளார்.
அரசு வழக்கறிஞர் ரேச்சல் ஷென்டன் நீதிமன்றத்தில் அளித்த தகவலின்படி, விபத்து நடப்பதற்கு முந்தைய ஏழு மணி நேரத்தில் ரெஹ்மான் குறைந்தது 20 முறை கொக்கைன் போன்ற சட்டவிரோத போதைப்பொருளை உட்கொண்டது தெரிய வந்துள்ளது.
மேலும், அவர் நகரத்தில் உள்ள இரண்டு மசாஜ் நிலையங்களுக்கு சென்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ரெஹ்மானின் இந்த அதிகப்படியான போதைப்பொருள் பயன்பாடு, அவரது வாகனம் ஓட்டும் திறனை முற்றிலும் முடக்கியதாக அரசு வழக்கறிஞர் நீதிபதி ஆலன் கான்ராட் கே.சி.யிடம் வாதாடினார்.
மேலும், ரெஹ்மானின் வேன் முதலில் மோசலி தெருவில் ஒரு டிராம் வண்டியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து, தனது பெற்றோருடன் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் சிறுமி லூலுவை அந்த வேன் பயங்கரமாக மோதியுள்ளது.
இதையடுத்து, ரெஹ்மான் அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிறுமி லூலு பரிதாபமாக உயிரிழந்தார்.
பழைய குற்றவாளி
ரெஹ்மான் இதற்கு முன்பும் குற்றச் செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு, சோர்டனில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த மோட்டார் வாகன விபத்து வழக்கில் சம்பந்தப்பட்ட காரை எரித்து, நீதியின் போக்கை திசை திருப்பும் சதி வழக்கில் அவர் ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
நீதிபதி கான்ராட், ரெஹ்மானை நீதிமன்ற காவலில் வைத்துள்ளார். இந்த வழக்கில் அவரது தண்டனை விவரங்கள் வரும் மே 27ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |