சில நிமிடங்கள் தான்... லண்டன் நகர மக்களை அலறவைத்த சம்பவம்: வெளிவரும் கலங்கடிக்கும் தகவல்
கிழக்கு லண்டனின் புறநகரில் உள்ள வெனிங்டன் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு டசினுக்கும் மேலான குடும்பங்கள் வீடிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் நேற்று 40C வெப்பநிலை பதிவாகி, முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. லண்டன் நகரம் முழுவதும் வெப்ப அலை காரணமாக மொத்தம் 41 குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளது.
இதில், பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் வெனிங்டன் கிராமத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளது. மட்டுமின்றி நேற்று 12 தொழுவங்களும் தீக்கிரையாகியுள்ளது. டேகன்ஹாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 வீடுகள் மற்றும் 25 வாகனங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இந்த நிலையில் கண்ணெதிரே தங்கள் குடியிருப்புகள் எரிந்து சாம்பலாவதை கிராம மக்கள் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளை காப்பாற்ற இறுதிகட்ட முயற்சியில் ஈடுபட்டதை விவரித்துள்ளனர்.
சிலர் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தங்களாலான முயற்சிகளை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளனர். ஒரு குடும்பம் தங்களின் 700,000 பவுண்டுகள் மதிப்பிலான கனவு இல்லம் மொத்தமாக தீக்கிரையாகி, வாழ முடியாதபடி சேதமடைந்துள்ளதை கண்ணீருடன் இன்று வெளிப்படுத்தியுள்ளது.
இதுவரை சேமித்த மொத்த பொருட்களும் தீக்கிரையானதாக கூறும் பலர், அவைகளை சொந்தமாக்குவதற்காக தாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தீயின் உக்கிரம் காரணமாக, தங்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது எனவும், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து போராடியதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தம்பதி ஒன்று 16 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசையாக வாங்கிய வீடானது மொத்தமாக எரிந்து சாம்பலானதாக கூறியுள்ளனர்.