பெண்கள் மீதான அத்துமீறலுக்கும் புலம்பெயர்தலுக்கும் முடிச்சு போடாதீர்கள்: பிரித்தானிய பெண் பிரபலங்கள் கடிதம்
பிரித்தானிய பெண் பிரபலங்கள் சிலர் எழுதியுள்ள பகிரங்க கடிதம் ஒன்றில், பிரித்தானியாவில் பெண்கள் மீது நடக்கும் அத்துமீறலை புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது சுமத்துவதை கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
அத்துமீறலுக்கும் புலம்பெயர்தலுக்கும் முடிச்சு போடாதீர்கள்
வலதுசாரிகளுக்கு எதிரான பெண்கள் என தலைப்பிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் இசைக்கலைஞர்களான பலோமா ஃபெய்த், சார்லட் சர்ச் மற்றும் அனௌஷ்கா சங்கர், மற்றும் லேபர் கட்சி, கிரீன்ஸ் கட்சி மற்றும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களான கிம் ஜான்சன், எல்லி சௌன்ஸ், டயான் அபோட் மற்றும் சாரா சுல்தானா ஆகியோரும் அடங்குவர்.
பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாப்பது என்னும் தீவிர வலதுசாரிகளின் இனவெறிப் பொய்களை நாங்கள் நிராகரிக்கிறோம். அவர்கள் பெண்களின் பாதுகாவலர்கள் அல்ல, அவர்கள் வெறுப்பு மற்றும் பிரிவினையைத் தூண்டுவதற்காக பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது அந்தக் கடிதம்.
புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் ஹொட்டல்களுக்கு வெளியே போராட்டங்கள் அதிகரித்துள்ளது மற்றும், புகலிடக் கோரிக்கையாளர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பான பல வழக்குகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வலதுசாரிகள் முயற்சிப்பதைத் தொடர்ந்து, இப்படி ஒரு கடிதத்தை இந்த பெண் பிரபலங்கள் எழுதியுள்ளார்கள்.
Reform UK கட்சியின் தலைவரான Nigel Farage, அரசின் புலம்பெயர்தல் கொள்கைகளை பெண்கள் மீதான அத்துமீறல் குற்றங்களின் அதிகரிப்புடன் இணைக்க முயற்சித்துவருகிறார்.
எசெக்ஸின் எப்பிங்கில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹொட்டலுக்கு வெளியே, போராட்டக்காரர்களுடன் இணைந்த நிழல் நீதித்துறை செயலாளர் ராபர்ட் ஜென்ரிக், கடந்த மாதம் பிரிட்டனுக்கு வரும் இடைக்கால மனப்பான்மை கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களால், தனது மூன்று இளம் மகள்களின் பாதுகாப்பு குறித்து தனக்கு அச்சம் உருவாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், Stand up to Racism என்னும் அமைப்புடன் இணைந்து எழுதப்பட்ட இந்தக் கடிதம், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை ஒரு தீவிரமான மற்றும் அவசரமான பிரச்சினை. ஆனால், அகதிகள், இஸ்லாமியர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை குறிவைக்கும் ராபர்ட் ஜென்ரிக் மற்றும் Nigel Farage போன்றவர்களால் அதை ஒருபோதும் தீர்க்க முடியாது என்கிறது.
புகலிடம் கோருபவர்கள், பெண்கலுக்கெதிரான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர்களில் பலரே வன்முறை, போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பியவர்கள். அவர்களைக் குறை கூறுவது, துஷ்பிரயோகத்திற்கான ஆழமான வேரூன்றிய காரணங்களைக் கையாள்வதிலிருந்தும், உண்மையிலேயே அத்தகைய குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கணக்குக் கொடுக்க வைப்பதிலிருந்தும் கவனத்தைத் திசை திருப்புகிறது என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அகதிகள் வசிக்கும் ஹோட்டல்களுக்கு வெளியே போராட்டங்களைத் திரட்டுவதற்காக தீவிர வலதுசாரிகள் பொய்களைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்புவதாக அந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது. இந்த நடவடிக்கை, பெண்களைப் பாதுகாப்பதற்காக எதையும் செய்யவில்லை என்றும் அந்தக் கடிதம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு தீவிர வலதுசாரிக் கலவரங்களில் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்தில் இருவர், குடும்ப வன்முறைக்காக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டவர்கள் என்கிறது பிரித்தானிய ஊடகம் ஒன்று.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |