பிரித்தானியாவில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு...
பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி என்பார்கள். அதுவும், பழைய காலத்தில், சரியான மருத்துவ வசதி இல்லாத காலகட்டத்தில், பெண்ணுக்குப் பிரசவம் என்றால், பெண்ணின் பெற்றோர் பயத்துடன், கடவுளை வேண்டிக்கொண்டு, தாயும் சேயும் நலம் என ஒரு வார்த்தை மருத்துவச்சி கூறமாட்டாளா என காத்திருந்த ஒரு காலகட்டம் இருந்தது.
சிறிய கிராமத்திலுள்ள ஏழைப்பெண்கள் முதல், ராஜ அரண்மனையில் வாழும் மகாராணிகள் வரை, பிரசவத்தின்போது உயிரிழந்த பெண்கள் பலர் உண்டு.
இதெல்லாம் அந்தக் காலம் என்று நினைக்கிறோம். ஆனால், நல்ல நேரம் பார்த்து சிசேரியன் மூலம் குழந்தையை எடுத்துவிடலாம் என சர்வசாதாரணமாக கூறும் ஒரு நிலை ஏற்படும் அளவுக்கு மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்திலும், பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழக்க நேரிடுகிறது என்பது வருத்தத்திற்குரிய ஒரு விடயம்தான்.
விடயம் என்னவென்றால், பிரித்தானியா போன்ற வளர்ந்த நாடுகளிலும், இன்றும் பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழக்கிறார்கள் என்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.
கணிசமாக அதிகரித்துள்ள உயிரிழப்பு எண்ணிக்கை
சமீப காலமாக பிரசவம் தொடர்பில் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை பிரித்தானியாவில் அதிகரித்துவருவது, மருத்துவ உலகில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2020க்கும் 2022க்கும் இடையில் பிரசவம் தொடர்பில் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை, 100,000 பேருக்கு 13.41 ஆகும். 2017க்கும் 2019க்கும் இடையே இந்த எண்ணிக்கை 8.79ஆக இருந்தது.
அதிகபட்சமாக, 2003க்கும் 2005க்கும் இடையில் பிரசவம் தொடர்பில் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை, 100,000 பேருக்கு 13.95 ஆக இருந்தது.
கொரோனா காலகட்டத்தில், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பைத் தவிர்த்தும், 2020க்கும் 2022க்கும் இடையில், பிரசவம் தொடர்பில் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை, 100,000 பேருக்கு 11.54ஆக இருந்துள்ளது.
என்ன காரணம்?
இப்படி பிரசவத்தின்போது பெண்கள் உயிரிழப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, பிரசவம் அல்லது பிரசவத்தின் பின் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சினைகளால் மரணமடையும் பெண்களின் எண்ணிக்கையைவிட, கர்ப்பகாலத்தின்போதோ அல்லது குழந்தை பிறந்த பின்பான முதல் ஆண்டோ, மன அழுத்தத்திற்குள்ளாகும் பெண்கள் உயிரிழக்கும் எண்ணிக்கை, குறிப்பாக தற்கொலை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை, இரண்டு மடங்குக்கும் அதிகம் என்கிறது.
மன அழுத்தத்துக்கும், இதுபோன்ற இளம் தாய்மார்களின் உயிரிழப்புக்கும், சமூக பொருளாதார அந்தஸ்து, கர்ப்பகாலத்துக்கு முன்பே இருந்த மன நல பாதிப்புகள், பிரசவத்தின்போது ஏற்படும் அசாதாரண பிரச்சினைகள் மற்றும் குழந்தை பிறந்து ஓராண்டுக்குள் இறப்பது ஆகிய பிரச்சினைகளும் காரணம் என்கின்றன ஆய்வுகள்.
பெண் கர்ப்பமாக இருக்கும்போது சண்டைக்காட்சிகள் உள்ள திரைப்படங்கள் பார்க்கக்கூடாது, மெல்லிசை கேட்கலாம், மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என நம் ஊர்களில் பெரியவர்கள் ஆலோசனை கூறுவதுண்டு. ஆக, கர்ப்பிணியின் கணவனும், பெற்றோரும், அவளுடைய உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலத்திலும் கவனம் செலுத்தினால், இப்படிப்பட்ட மரணங்களில் சிலவற்றையாவது தவிர்க்கலாம். பிரசவத்தின்போது, ஒரு பெண் இறந்தாலும், அவளது குடும்பத்துக்கு மட்டுமாவது, அது இழப்புதானே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |