ரஷ்ய நாட்டுக்குள் உக்ரைன் எங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தலாம்: ஆதரவு தெரிவித்துள்ள பிரித்தானிய அமைச்சர்
ரஷ்யாவுக்குள் கடந்த சில நாட்களாக எண்ணெய்க்கிடங்குகள் தாக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்ய நாட்டுக்குள்ளேயே உக்ரைன் தாக்குதல் நடத்தியது நியாயமானதுதான் என பிரித்தானிய தரப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய இராணுவ அமைச்சரான James Heappey இது குறித்துக் கூறும்போது, ரஷ்ய நாட்டுக்குள்ளேயே உக்ரைன் தாக்குதல் நடத்தியது நியாயமானதுதான் என்றும், தாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
தாங்கள் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள பிரித்தானியா, புடினுடைய படைகளை உக்ரைன் தங்கள் நாட்டை விட்டுத் துரத்துவதற்கான எல்லா வாய்ப்பும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கள் அர்த்தமற்ற வெறும் சத்தம் மட்டுமே என்றும் கூறியுள்ளார் Heappey.
ஏற்கனவே அமெரிக்காவின் மூத்த அலுவலர்கள் சிலர் உக்ரைன் வென்றுவிட்டது, ரஷ்யா தோற்றது போலத்தான் என்று கூறியுள்ள நிலையில், பிரித்தானியாவும் புடினுக்கு எரிச்சலூட்டும் வகையில் பேசியுள்ளதிலிருந்து, ஜேர்மனி போன்ற பிரித்தானியாவில் சகாக்கள் எச்சரிக்கை விடுக்கும் நிலையிலிருந்து ஆயுதங்கள் வழங்கும் நிலைக்கு மாறியுள்ளதைப் போல, பிரித்தானியாவும் தன் நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது நன்கு புலப்படுகிறது.