ரஷ்ய ஆயுதங்களில் சுவிஸ் தயாரிப்புகளான பாகங்கள்: உக்ரைன் வருத்தம்
Ukraine still finding Swiss components in Russian weapons: உக்ரைனை தாக்கும் ரஷ்ய ஆயுதங்களில் தொடர்ந்து சுவிஸ் தயாரிப்புகளான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன.
ரஷ்யா தினமும் உக்ரைன் மீது ஏவுகணைகள் மூலமும் ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில், உக்ரைனைத் தாக்கும் ரஷ்ய ஆயுதங்களில் சுவிஸ் தயாரிப்புகளான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருவதாக உக்ரைன் தரப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் வருத்தம்
உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவரான வ்லாடிஸ்லாவ் வ்லாசியுக் (Vladyslav Vlasiuk) என்பவர், உக்ரைனை தினமும் தாக்கும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில், சுவிஸ் தயாரிப்புகளான பாகங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கிறார்.
90 சதவிகித ரஷ்ய ஆயுதங்களில், சுவிஸ் தயாரிப்புகளான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளியிலிருந்து பார்ப்பதற்கு ரஷ்யாவின் ஆயுத தயாரிப்புத் துறை தன்னிறைவு கொண்டதாகத் தோன்றினாலும், உண்மையில், ரஷ்யா வேறு நாடுகளிலிருந்து ஆயுத பாகங்களை இறக்குமதி செய்வதாகத் தெரிவிக்கிறார் வ்லாடிஸ்லாவ்.
ஆகவே, சுவிட்சர்லாந்து முதலான நாடுகள் ரஷ்யாவுக்கு ஆயுத பாகங்களை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தி, தடைகள் விதித்தால் உண்மையான மாற்றத்தை உருவாக்கலாம் என்கிறார் அவர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தோ, தங்கள் நாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக தெரிவித்துள்ளதுடன், உக்ரைன் கூறியுள்ள ஆயுத பாகங்கள் சுவிட்சர்லாந்துக்கு வெளியே தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், உக்ரைன் தரப்போ, சுவிட்சர்லாந்தின் நடவடிகைகள் போதாது, சுவிஸ் அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.