ரஷ்யாவை சொந்த மண்ணில் திணறடிக்கும் உக்ரைன்: பிரித்தானியா அளித்த ஊக்கமருந்து
ரஷ்ய மண்ணில் திடீர் தாக்குதலை முன்னெடுத்துள்ள உக்ரைன், இதுவரை 386 சதுர மைல்கள் முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆத்திரத்தை தூண்டும் செயல்
2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா முன்னெடுத்த தாக்குதலுக்கு பின்னர், உக்ரைனின் முதல் பதிலடி தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது. ஆனால் உக்ரைனின் எதிர்பாராத தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், எல்லையோர மாவட்டங்களில் இருந்து 200,000 மக்களை ரஷ்யா வெளியேற்றியுள்ளது.
மட்டுமின்றி, இது ஆத்திரத்தை தூண்டும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் துருப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, ரஷ்ய மண்ணில் தங்களை பாதுகாத்துக்கொள்ள உக்ரைன் ராணுவம் பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தலாம் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
ரஷ்ய மண்ணில் பயன்படுத்தலாம்
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு தங்களைத் தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளது, அது ரஷ்ய மண்ணிலும் பொருந்தும் என விளக்கமளித்துள்ளார்.
ஆனால், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே உக்ரைனுக்கு விளக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட தூர Storm Shadow ஏவுகணையை தவிர்த்து, பிரித்தானியா வழங்கியுள்ள அனைத்து ஆயுதங்களையும் ரஷ்ய மண்ணில் உக்ரைன் பயன்படுத்தலாம் என்றே பிரித்தானியா தற்போது அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்யாவின் சுமார் 1,000 சதுர கிமீ (386 சதுர மைல்கள்) மற்றும் 74 நகரங்கள் மற்றும் கிராமங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |