உங்கள் மகனை காப்பாற்ற முடியவில்லை: கனேடிய தாயாரிடம் மன்னிப்புக் கோரிய உக்ரேனிய தளபதி
உக்ரைனில் ரஷ்ய இராணுவ டாங்கியால் கொல்லப்பட்ட கனேடிய வீரர் தொடர்பில் அவரது தாயாரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார் உக்ரேனிய தளபதி ஒருவர்.
உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய தாக்குதலில் படுகாயமடைந்த சக வீரரை காப்பாற்றும் முயற்சியில் கனேடிய வீரர் 31 வயதான Emile-Antoine Roy-Sirois கொல்லப்பட்டார்.
ஜூலை 18ம் திகதி நடந்த இச்சம்பவத்தில் ரஷ்ய டாங்கியில் சிக்கி கனேடிய வீரருடன் மேலும் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய படையெடுப்பிற்கு பின்னர் உக்ரைனில் கொல்லப்படும் முதல் கனேடிய வீரர் இவர் என தெரிய வந்துள்ளது.
தற்போது அவரது சடலமானது மத்திய உக்ரைன் நகரமான Dnipro-வில் சவக்கிடங்கு ஒன்றில் பாதுகாக்கப்படுவதுடன், கனேடிய தூதரகத்தின் வழிகாட்டுதலுக்காகவும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, அவரது சடலத்தை கனடாவுக்கு எடுத்துச் செல்லும் அனைத்து செலவையும் தாங்களே ஏற்பதாகவும் உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் தளபதி Ruslan தலைமையிலேயே கனேடிய வீரர்கள் இருவர் போரிட்டு வந்துள்ளனர்.
அதில் ஒருவர் தற்போது கொல்லப்பட்டுள்ள நிலையில், தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள கனேடிய தூதரகத்தை தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார் தளபதி Ruslan. ஆனால் கனடா தரப்பில் இருந்து இதுவரை உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், கொல்லப்பட்ட கனேடிய வீரரின் குடும்பத்தினரின் முடிவை அறிய தாம் காத்திருப்பதாகவும் தளபதி Ruslan தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, Sirois-ன் தாயாரிடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும், அவரை காப்பாற்ற தம்மால் முடியாமல் போயுள்ளது எனவும் தளபதி Ruslan தெரிவித்துள்ளார்.