நீங்கள் போருக்கு பயப்படுகிறீர்கள்: பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் கண்ணீர் விட்ட உக்ரைன் பெண் பத்திரிகையாளர்!
போலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் நீங்கள் போருக்கு பயப்படுகிறீர்கள் என குற்றம்சாட்டி, உக்ரைனை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கண்ணீர் வடித்தது, பெரும் பரபரப்பை செய்தியாளர் சந்திப்பில் ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையை குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பாவின் கிழக்கு எல்லை பகுதி நாடான போலந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சனை உக்ரைன் பெண் பத்திரிகையாளர் டாரியா கலேனியுக் கண்ணீருடன் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Just had a chance to ask a question to @BorisJohnson https://t.co/4ee6eXJj6g
— Daria Kaleniuk (@dkaleniuk) March 1, 2022
போலந்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை, உக்ரைனின் எல்லையிலிருந்து தப்பிவந்த உக்ரைனிய பெண் பத்திரிகையாளர் டாரியா கலேனியுக் எதிர்கொண்டு, ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் பொதுமக்களை தாக்கி கொல்வதை தடுக்க பறக்கும் தடை மண்டலத்தை அறிவிக்கவேண்டும் என கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார்.
நீங்கள் போலந்துக்கு வருகிறீர்கள், நீங்கள் கிவ்வுக்கு ஏன் வரவில்லை, நீங்கள் லிவிவுக்கு ஏன் வரவில்லை. ஏன் போருக்கு பயப்படுகிறீர்கள், ஏனென்றால் நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் உலக போருக்கு பயப்படுகிறது, உண்மை என்னவென்றால் மூன்றாம் உலக போர் எப்போதோ தொடங்கிவிட்டது.
நீங்கள் தடைகளை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் எங்கள் குழந்தைகள் குண்டுவெடிப்பிற்கு மத்தியில் உள்ளன, எனது குடும்ப உறுப்பினர்கள், எனது குழு உறுப்பினர்கள், நாங்கள் அனைவரும் அழுகிறோம், எங்கு ஓடுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுதான் உக்ரைனின் நிலைமை என கண்ணீர்மல்க கோரிக்கைவிடுத்துள்ளார்.
இந்தநிலையில் அதற்கு பதிலளித்த போரிஸ் ஜான்சன், டாரியா கலேனியுக் நீங்கள் இங்கு வந்ததற்கு நன்றி, நீங்கள் இங்கு வர முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் விரும்பும் வழியில் உதவுவதற்கு பிரித்தானியா அரசாங்கத்தால் முடியாது என்பதை நேர்மையுடன் ஒத்துக்கொள்கிறேன்.
அவ்வாறு ரஷ்யாவுடன் நேரடி போர் ஈடுபட்டால் அதன்விளைவுகள் மிக பெரிய அளவில் இருக்கும் எனவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.