இந்த வருஷம் இதுவும் நடக்கலைன்னா சிக்கல் தான் - வருத்தத்துடன் பேசிய உநாத்கத்
உள்ளூர் போட்டிகள் ரத்து செய்வது குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சௌராஷ்ட்ரா அணியின் கேப்டனுமான ஜெய்தவ் உநாத்கத் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கு இது சிறந்த அடித்தளமாக அமைகிறது.
குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவதால் அனைத்து விதமான வீரர்களின் மனநிலையை புரிந்து கொள்ளவும் எளிதாக அமைகிறது.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக ரஞ்சிப்போட்டிகள் இந்த வருடமும் நடத்துவது கடினம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா காரணமாக போட்டிகள் நடக்காத நிலையில் இந்த ஆண்டும் நடைபெறாது என கூறப்படுவது வளர்ந்து வரும் வீரர்களுக்கு மிகப் பெரும் பின்னடைவாக அமையும் என விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உள்ளூர் போட்டிகள் நடத்தப்படாமல் போவது வீரர்களின் திறமையை நிச்சயம் பாதிக்கும் என சௌராஷ்ட்ரா அணியின் கேப்டன் ஜெய்தவ் உநாத்கத் கூறியுள்ளார். மேலும் கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்றால் பிசிசிஐ சிறப்பாக முடிவெடுத்து பயோ பபிள் விதிகள் மூலம் வருகிற பிப்ரவரி மாதம் நடத்தும் என நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.