நாடு கடத்தப்படும்போது கருவிலிருந்த குழந்தை உயிரிழப்பு... அகதிக்கு இழப்பீடு வழங்க சுவிட்சர்லாந்து மறுப்பு
நாடு கடத்தப்படும்போது தன் கருவிலிருந்த குழந்தையை சாகக்கொடுத்த சிரிய அகதி ஒருவருக்கு இழப்பீடு வழங்க சுவிட்சர்லாந்து மறுத்துவிட்டது.
2014ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண், மற்ற சில அகதிகளுடன் சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
அப்போது, அவர் வலியால் துடித்த நிலையிலும், எல்லை பாதுகாவலர் ஒருவர் அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி எதுவும் ஏற்பாடு செய்யாமல் இருந்துள்ளார்.
நாடு கடத்தப்பட்டபின் இத்தாலியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு, குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
அந்த குழந்தை நாடு கடத்தப்படும் முன் இறந்ததா அல்லது அதற்குப் பின் இறந்ததா என்பதை மருத்துவர்களால் உறுதிப்படுத்த இயலவில்லை.
அந்த எல்லை பாதுகாவலர் உடல் ரீதியாக ஊறு விளைவித்தல் என்ற குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாலும், அந்த குழந்தையின் உயிரிழப்புக்கு அவரைக் காரணம் காட்ட முடியாது என நிதித்துறை கூறிவிட்டதால், அந்த பெண்ணுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சட்டத்தரணி இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.