தெற்காசியர்கள் கொரோனாவால் அதிகம் உயிரிழப்பது ஏன்? : அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த விடயம்
தெற்காசிய நாட்டவர்களில் 60 சதவிகிதத்தினர் உடலில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட ஜீன், கொரோனாவால் மரணம் ஏற்படும் அபாயத்தை இரண்டு மடங்கு அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
60 சதவிகித தெற்காசிய நாட்டவர்கள் உடலில், LZTFL1 என்ற ஜீன் காணப்படுவதாகவும், இந்த ஜீன் கொரோனா தொற்றியவர்களின் நுரையீரலில் அந்த வைரஸ் எளிதாக இனப்பெருக்கம் செய்ய அனுமதிப்பதாகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
அதே நேரத்தில், ஐரோப்பிய மக்களில் 15 சதவிகிதத்தினர் உடலில் மட்டுமே இந்த கோவிட் ஜீன் காணப்படுகிறதாம். கருப்பின ஆப்பிரிக்க நாட்டவர்களிலோ, வெறும் 2 சதவிகிதம் பேர் உடலில்தான் இந்த ஜீன் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் தெற்காசிய நாட்டவர்கள் எளிதில் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு இந்த ஜீனும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அதே நேரத்தில், இந்த ஜீன் மட்டுமே கொரோனாவால் மரணம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் கூறிவிடமுடியாது என்று கூறும் அவர்கள், சமூக மற்றும் பொருளாதார காரணங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.
தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகத் தரவுகளின்படி, இங்கிலாந்து நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவானபோது, பங்களாதேஷ் நாட்டவர்கள் ஐரோப்பியர்களை விட ஐந்து மடங்கு அதிகம் கொரோனாவால் மரணமடையும் அபாயத்திலிருந்ததாகவும்,
பாகிஸ்தான் நாட்டவர்கள் கொரோனாவால் மரணமடையும் அபாயத்தில் இரண்டாம் இடத்திலும் (3.4 மடங்கு) , இந்தியர்கள் நான்காம் இடத்திலும் (1.95 மடங்கு) இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.