ரஷ்யாவுடனான பிரச்சினையால் சுவிஸ் கைக்கடிகார உற்பத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத பாதிப்பு
உக்ரைன் மீது ரஷ்யா திடீரென போர் தொடுக்க, அதனால் பல நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதிக்க, சில நாடுகள் தடை விதிக்க வற்புறுத்தப்பட, இப்போது போரால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மட்டுமின்றி, ரஷ்யா மீது தடை விதித்துள்ளதாலும் சில எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, கைக்கடிகாரங்களுக்குப் புகழ் பெற்ற சுவிட்சர்லாந்துக்கு, கைகடிகாரங்கள் தயாரிப்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் வைரங்கள், தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை விநியோகம் செய்யும் முக்கிய நாடு ரஷ்யா.
ரஷ்யாவின் மிகப்பெரிய வைரச் சுரங்க குழுமமான Alrosa, உலகிலேயே மிகப்பெரிய வைர நிறுவனம் ஆகும். பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய சில மணி நேரங்களுக்குள் அமெரிக்கா அந்நிறுவனம் மீது தடைகள் விதித்தது.
ஆகவே, சுவிஸ் கைக்கடிகார நிறுவனங்கள் பல ரஷ்யாவிலிருந்து வைரங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டன.
ஆக, இப்போது கைவசம் இருக்கும் தங்கம், வைரம் முதலான பொருட்களைக் கொண்டு கைக்கடிகார உற்பத்தி நடைபெற்று வருகிறது.
ஆனாலும், ஆறு மாதங்கள் வரைதான் கையிருப்பை வைத்து சமாளிக்க முடியும். கைக்கடிகாரங்கள் செய்வதற்கான மூலப்பொருட்கள் கிடைக்கவில்லையென்றால், கைக்கடிகாரங்கள் விலை நிச்சயம் உயரும்.
இக்கட்டான காலகட்டங்களில் எல்லாம் வசதியுடையவர்கள் சமாளித்துக்கொள்ளலாம் என்ற ஒரு எண்ணம் பரவலாக காணப்படும் நிலையில், இப்போது வசதியுள்ளவர்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது உக்ரைன் போர்.
ஆக, இந்த போர் எதிர்பார்க்காத இடங்களிலெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எப்போது போர் முடிவுக்கு வரும் என பல்வேறு தரப்பினரும் இப்போது யோசிக்கத் துவங்கியுள்ளார்கள்.