இந்திய பிரதமர் வசித்து வந்த பங்களாவை வாங்கிய அடையாளம் தெரியாத தொழிலதிபர்.., எவ்வளவு விலை?
ஒரு காலத்தில் இந்திய பிரதமர் வசித்து வந்த வரலாற்று சிறப்புமிக்க பங்களாவை வாங்கிய நபரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.
பங்களா விற்பனை
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லமான லுட்யென்ஸின் டெல்லி பங்களா, ரூ.1100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
இது இப்போது இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த குடியிருப்பு சொத்து ஒப்பந்தமாகும். இது 17 மோதிலால் நேரு மார்க்கில் (முந்தைய 17 யார்க் சாலை) அமைந்துள்ள 3.7 ஏக்கர் பங்களா ஆகும்.
இந்தச் சொத்தை ஒரு உள்நாட்டு பான தொழிலதிபர் வாங்கியுள்ளார். அவரது அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்தை அதன் தற்போதைய உரிமையாளர்களான ராஜஸ்தானி அரச குடும்பத்தின் வம்சாவளியினரான ராஜ் குமாரி கக்கர் மற்றும் பினா ராணி ஆகியோரிடமிருந்து வாங்கியுள்ளார் தொழிலதிபர். உரிமையாளர்கள் இந்த சொத்துக்கு ரூ.1,400 கோடி கேட்டனர், இருப்பினும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அது ரூ.1,100க்கு விற்கப்பட்டது.
இதனிடையே வாங்குபவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னணி சட்ட நிறுவனம் "எங்கள் வாடிக்கையாளர் டெல்லியில் உள்ள பிளாட் எண் 5, பிளாக் எண் 14, 17 மோதிலால் நேரு மார்க்கில் 14,973.383 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள குடியிருப்பு சொத்தை வாங்க விரும்புகிறார்.
அதற்காக, தற்போதைய உரிமையாளர்களின் உரிமையை நாங்கள் விசாரித்து வருகிறோம்" என்று கூறி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இப்போது அவர்கள் சொத்தின் மீது உரிமை கோரும் எந்தவொரு நபரும் ஏழு நாட்களுக்குள் முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில் தொழிலதிபரால் சொத்து முழுமையாக கையகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த பங்களா மண்டலமானது 1912 மற்றும் 1930 க்கு இடையில் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லுட்யென்ஸால் வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்தப் பகுதியில் சுமார் 3000 பங்களாக்கள், அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் இந்தியாவின் சில பணக்கார வணிகக் குடும்பங்களின் குடியிருப்புகள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |