கேரளா மாநிலத்தின் பெயர் மாறுகிறது - மத்திய அரசு ஒப்புதல்
1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா(kerala) உருவானது. மலையாளத்தில் இம்மாநிலத்திற்கு 'கேரளம்' (Keralam)என்று பெயர் இருந்தாலும், கேரளா என்று தான் பொதுவாக அழைக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 'கேரளம்' என மாற்றக்கோரி நீண்ட காலமாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
கேரளம் பெயர் மாற்றம்
அரசியலமைப்பின் 3வது பிரிவின்கீழ் இதை ‘கேரளம்’ என்று திருத்தம் செய்து பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி 2023 ஆம் ஆண்டில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அந்த தீர்மானத்தில் சில குறைகள் இருப்பதாக கூறி மத்திய அரசு அதனை திருப்பி அனுப்பியது.

இதனையடுத்து, மீண்டும் 2024 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கேரளா என்பதை கேரளம் என பெயர் மாற்றுவதற்கான தீர்மானத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர், இந்திய அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக, கேரள (பெயர் மாற்றம்) மசோதா, 2026 என்ற மசோதாவை, இந்திய ஜனாதிபதி கேரள மாநில சட்டமன்றத்திற்கு அனுப்புவார்.
மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களைப் பெற்ற பிறகு, பெயர் மாற்றத்திற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பரிந்துரை பெறப்படும்.
பிரிவு 3 இன் படி, பாராளுமன்றம் சட்டத்தின் மூலம் எந்த மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம். இந்த மாற்றம் மாநிலத்தின், நிர்வாக கட்டமைப்புகள், நிர்வாக வழிமுறைகள் அல்லது பிராந்திய எல்லைகளை பாதிக்காது.
கேரளம் என்று பெயர் மாற்றுவது தொடர்பான விடயம் உள்துறை அமைச்சகத்தில் பரிசீலிக்கப்பட்டு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஒப்புதலுடன், கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கான அமைச்சரவைக்கான வரைவுக் குறிப்பு, சட்ட விவகாரங்கள் துறை மற்றும் சட்டமன்றத் துறை, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கருத்துகளுக்காக அனுப்பப்பட்டது.
கேரளாவின் பெயரை 'கேரளம்' என்று மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை மற்றும் சட்டமன்றத் துறை ஒப்புதல் அளித்தன. வரும் ஏப்ரல் மே மாதத்தில் கேரளா சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாநிலம் என இருந்ததை தமிழ்நாடு என பெயர் மாற்றக்கோரி 1956 ஆம் ஆண்டில் தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தார்.
18 ஜூலை 1967 அன்று அன்றைய முதல்வர் அண்ணா தலைமையிலான அரசு ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம் குறித்த அரசியல் சட்டத் திருத்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |