பசியால் வாடும் குழந்தைகள்: பிள்ளைக்கு பாலுக்காக தவறான செயல்களில் இறங்கும் பெற்றோர்
பிள்ளைக்கு பால் வேண்டும் என்பதற்காக குற்றச்செயல்களில் இறங்கும் பெற்றோர் குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பால் பவுடர் திருடும் தந்தை
ஆண் குழந்தை ஒன்றின் தந்தையான ஒரு பிரித்தானியர், தன் மனைவியும் பிரசவ விடுப்பில் இருப்பதால், பிள்ளைக்கு பால் வாங்கிக் கொடுக்க வழி தெரியாமல், கடைகளிலிருந்து பால் பவுடரைத் திருடிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
குழந்தையோ தாய்ப்பால் குடிக்க மறுக்க, பால் பவுடரைத் தவிர அந்த பெற்றோருக்கு வேறு வழியும் இல்லை.
பிடிபட்டுவிடுவோமோ என பயந்து பால் பவுடரைத் திருடத் துவங்கிய அவருக்கு, பின்னர் ஒரு யோசனை தோன்றியுள்ளது. அதாவது, 20 பவுண்டுகளுக்கு மளிகைப்பொருட்கள் வாங்கிவிட்டு, கூடவே ஒரு பால் பவுடர் டின்னையும் திருடத் துவங்கியுள்ளார்.
சில முறை பிடிபட்டபோது, பையில் என்ன வைத்திருக்கிறீர்கள் என கடைக்காரர்கள் கேட்க, ஒரு பொருளைத் திருடிவைத்துள்ளேன், அதற்கு கொடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை என்றே கூறியிருக்கிறார்.
ஒருமுறை, கடை ஊழியர் பொலிசாருக்கு தகவலளிக்க, அவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.
நிர்வாணப்படங்களை விற்க முன்வந்த தாய்
சிலர் பால் பவுடரில் நிறைய தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதிகம் போட்டு குழந்தைக்குக் கொடுப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால், அது குழந்தையின் உடல் நலனுக்கு நல்லதல்ல.
சிலர், கடைகளிலிருந்து பால் பவுடரைத் திருடி குறைந்த விலைக்கு விற்பவர்களிடம் பால் பவுடர் வாங்குவதாகத் தெரிவிக்கிறார்கள்.
பிள்ளை பெற்ற ஒரு தாயோ, தன்னுடைய நிர்வாணப் படங்களை விற்றாவது பிள்ளைக்கு பால் வாங்கிக் கொடுக்கலாமா என யோசித்ததாக தெரிவிக்கிறார்.
பால் பவுடர் வாங்க முடியாமல் தவிக்கும் இந்த பெற்றோர் பிரித்தானியாவில் வாழ்பவர்கள் என்பதை எண்ணும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.