மாதம் 1,600 பவுண்டுகள்: பிரித்தானியாவில் துவங்கயிருக்கும் புதிய அடிப்படை வருவாய் திட்டம்
பிரித்தானியாவில் முதன்முறையாக யுனிவர்சல் அடிப்படை வருமானம் என மாதம் 1,600 பவுண்டுகள் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்.
மாதம் குறிப்பிட்ட தொகை
குறித்த திட்டத்தில் கீழ் முதற்கட்டமாக 30 பேர்களை தெரிவு செய்து எந்த நிபந்தனையும் இன்றி மாதம் 1,600 பவுண்டுகள் தொகையை அளிக்க உள்ளனர். இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மாதம் 1,600 பவுண்டுகள் என அளித்து, அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
முதற்கட்டமாக வடக்கு லண்டனில் அமைந்துள்ள கிழக்கு பிஞ்ச்லி மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் மத்திய ஜாரோ ஆகிய இரு பகுதிகளை தெரிவு செய்துள்ளனர். இப்பகுதியில் உள்ள மக்களில் சிலரை தெரிவு செய்து அவர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகையை அளிக்க உள்ளனர்.
இந்த தொகையானது அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என குறிப்பிட்டுள்ள இந்த திட்டத்தினை முன்னெடுக்கும் அமைப்பு, மக்களின் உளவியல் மற்றும் உடல் ஆரோக்கியம், அவர்கள் வேலை செய்ய விரும்புகிறார்களா இல்லையா உள்ளிட்ட தரவுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
எதிர்வரும் சில ஆண்டுகளில் நமது சமூகம் அடிப்படை வருவாய் என்ற ஒருவகை திட்டத்தை எதிர்பார்க்கும் நிலை உருவாகும் எனவும், அதற்கு முன்னோடியாக அதன் சாதக பாதகங்களை ஆய்வு செய்யவே தற்போது சோதனை முயற்சிகள் முன்னெடுப்பதாக கூறப்படுகிறது.
பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வது
இதுபோன்ற ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டால், மக்களுக்கு ஒரு பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வது போலாகும் என்றும் கூறுகின்றனர். மேலும் எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்ற பாதுகாப்பின்மைக்கு இது ஒரு சாத்தியமான தீர்வாக இருக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர்.
@getty
ஆனால் இந்த திட்டமானது பொதுவாக அனைவருக்குமானதாக இருக்க கூடாது எனவும், தேவைப்படும் குறிப்பிட்ட மக்களுக்கானதாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கின்றனர்.
வேல்ஸில் இதுபோன்ற திட்டமொன்று ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இளையோர்களுக்கு மாதம் 1,600 பவுண்டுகள் அளிக்கின்றனர். சோதனை முயற்சி முடிவடையும் போது இதன் சாதக பாதகங்கள் வெளியாகும் என்றே கூறுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சுமார் 170 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற யுனிவர்சல் அடிப்படை வருவாய் திட்டமொன்றை அறிமுகம் செய்ய வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.