உள்ளூர் மாணவர்களை கண்டுகொள்ளாத பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்: வெளிவரும் விரிவான பின்னணி
பிரித்தானிய மாணவர்களை விட வெளிநாட்டு மாணவர்களுக்கு முதன்மையான பல பல்கலைக்கழகங்களும் நிதி உதவிகளை வாரி வழங்குவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களை
பிரித்தானியாவில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் பல வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் பொருட்டு, கட்டணத்தில் சலுகை உட்பட பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன்மையான பல பல்கலைக்கழகங்களும் உதவித்தொகையாக மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலவிடுகின்றன. இதனால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் சலுகைகள் மற்றும் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட ஆதாயங்களை பெறுகின்றனர்.
மொத்தம் 26 பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளில், உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களுக்கே பல்கலைக்கழகங்கள் அதிக சலுகைகளை அளிப்பதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரித்தானியாவில் செயல்படும் ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்ட கோரிக்கையில், 26 பல்கலைக்கழகங்கள் மட்டுமே வெளிப்படையாக தரவுகளை வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 151.3 மில்லியன் பவுண்டுகள் தொகையை வெளிநாட்டு மாணவர்களுக்காக இந்த 26 பல்கலைக்கழகங்கள் செலவிட்டுள்ளன. இதில் முதுகலை பட்டதாரிகளுக்கு 136.8 மில்லியன் பவுண்டுகளும் இளங்கலை பட்டதாரிகளுக்கு 14.5 மில்லியன் பவுண்டுகளும் செலவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் மாணவர்களுக்கு மொத்தமாக 149.1 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. இதில் முதுகலை பட்டதாரிகளுக்கு 56.1 மில்லியன் பவுண்டுகளும் இளங்கலை பட்டதாரிகளுக்கு 93 மில்லியன் பவுண்டுகளும் செலவிடப்பட்டுள்ளது.
சசெக்ஸ் பல்கலைக்கழகமானது வெளிநாட்டு மாணவர்களில் முதுகலை பட்டதாரிகளுக்கு என கடந்த ஆண்டு 3.2 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டுள்ளது. ஆனால் உள்ளூர் முதுகலை பட்டதாரிகளுக்கு 779,000 பவுண்டுகள் சலுகையாக அளித்துள்ளது.
கட்டண சலுகைகள்
கிளாஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்தில் 4,458 வெளிநாட்டு முதுகலை பட்டதாரிகள் 6.6 மில்லியன் பவுண்டுகள் தொகையை சலுகைகளாக பெற்றுள்ளனர். ஆனால் 223 உள்ளூர் முதுகலை மாணவர்கள் 320,497 பவுண்டுகள் தொகையை சலுகையாக பெற்றுள்ளனர்.
இலவசங்கள் மற்றும் கட்டண சலுகைகளால் ஒவ்வொரு மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தில் 11,000 முதல் 30,000 பவுண்டுகள் வரையில் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் இழக்கின்றன. இது மருத்துவ மாணவர்கள் என்றால், 67,000 பவுண்டுகள் வரையில் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
இலவசங்கள் மற்றும் கட்டண சலுகைகள் காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை இருமடங்கானதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும், விசா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை சரிவடைந்துள்ளதாகவே கூறப்படுகிறது.
வெளிநாட்டு மாணவர்கள் கட்டணமாக பெருந்தொகை அளிப்பதால் பிரித்தானியாவின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைவதாக பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |