இந்திய கிரிக்கெட்டிலிருந்து இளம் வீரர் ஓய்வு! அமெரிக்கா அணிக்காக விளையாட திட்டம்
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற முன்னாள் இந்திய அணி கேப்டன் உன்முக்த் சந்த் இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்த அறிவிப்பை உன்முக்த் சந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதிப்படுத்திய சந்த், வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாட தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை உன்முக்த் சந்த தலைமையிலான இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
2011-ல் டெல்லி அணியில் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கிய சந்த், ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
மொத்தம் 21 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சந்த், 1 அரைசதத்துடன் மொத்தம் 300 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
T1- On to the next innings of my life #JaiHind?? pic.twitter.com/fEEJ9xOdlt
— Unmukt Chand (@UnmuktChand9) August 13, 2021
முதல் தர கிரிக்கெட்டில் 3379 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 4505 ரன்களும், டி 20 போட்டிகளில் 1565 ரன்களும் எடுத்து சந்த் தனது 'இந்திய கிரிக்கெட்' வாழ்க்கைக்கு பிரியா விடையளித்துள்ளார்.
உலகக் கோப்பையில் உன்முக்தின் சக வீரரான ஸ்மித் பட்டேல் ஏற்கனவே அமெரிக்கா சென்று மைனர் லீக் விளையாடி வருகிறார். அவர் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிக்காக கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாட உள்ளார்.
இந்நிலையில், உன்முக்த் சந்த்-ம் அமெரிக்க அணிக்காக விளையாடவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.