கனடாவில் வேலை தேடுவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... வரலாறு காணாத அளவில் வேலை வாய்ப்புகள்
கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.
2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, தற்போது 72 சதவிகிதம் அளவுக்கு பணியிடங்கள் அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் துறை தெரிவித்துள்ளது.
தற்போது கனடாவில் 874,700 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் மாத தரவுகளைப் பார்க்கும்போது வேலை காலியிடங்கள் அக்டோபரை விட 9.3 சதவிகிதம் குறைந்துள்ளன. ஆனாலும், கொரோனா துவங்குவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட அதிக அளவில்தான் பணியிடங்கள் இன்னமும் காலியாக உள்ளன.
நவம்பர் நிலவரப்படி, குறிப்பாக போக்குவரத்து மற்றும் பொருட்கள் சேமிப்பகங்களில் அதிகபட்சமாக 51,500 பணியிடங்கள் காலியாக இருந்துள்ளன.
மேலும், தங்குமிடம் மற்றும் உணவகத்துறை, சுகாதாரத்துறை மற்றும் கட்டுமானத்துறையில் அதிக பணியிடங்கள் காலியாக உள்ளன.
நவம்பர் நிலவரப்படி, தங்குமிடம் மற்றும் உணவகத்துறையில் 130,100 காலியிடங்களும், சுகாதாரத்துறையில் 119,600 காலியிடங்களும், கட்டுமானத்துறையில் 67,800 காலியிடங்களும் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அவற்றில் நவம்பரிலேயே 37,200 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன.
என்றாலும், இன்னமும் 874,700 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் துறையின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.