ஐந்து வயது சிறுமியின் மரணம்... பற்றியெரியும் ஒரு அவுஸ்திரேலிய நகரம்
ஐந்து வயதுச் சிறுமியைப் படுகொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் சிகிச்சை பெற்றுவந்த அவுஸ்திரேலிய மருத்துவமனைக்கு வெளியே வன்முறை வெடித்துள்ளது.
டசின் கணக்கான மக்கள்
ஆலிஸ் ஸ்பிரிங்ஸில், உள்ளூர் சமூகத்தினரால் அடையாளம் காணப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் ஜெபர்சன் லூயிஸ் என்பவர் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, டசின் கணக்கான மக்கள் அந்த மருத்துவமனைக்கு வெளியே திரண்டனர். அத்துடன் தாக்குதலில் ஈடுபடவே, பொலிஸார் கண்ணீர் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
அந்த ஐந்து வயது சிறுமியின் உடல் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று நள்ளிரவுக்குச் சற்று முன்பு, ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் அருகே உள்ள ஒரு பூர்வகுடி நகர முகாமில் குறித்த சிறுமி கடைசியாகக் காணப்பட்டுள்ளார்.
இதனிடையே, மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தினரில் சிலர், லூயிஸ் பழிவாங்கலை எதிர்கொள்ள வேண்டும் என்று கூச்சலிட்டதுடன், காவல்துறை அவரைக் காப்பாற்றுவதாகக் குற்றம் சாட்டினர்.
பாரம்பரியத் தண்டனை
பழிவாங்கல் என்பது மத்திய அவுஸ்திரேலியாவில் பூர்வகுடி மரபுவழிச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாரம்பரியத் தண்டனையாகும். பொதுவாக, பூர்வீகக் குடும்பங்களுக்கும் குழுக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயலும் வகையில், இது மூத்தோர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

இதனிடையே, வடக்கு பிராந்திய காவல்துறை ஆணையர் மார்ட்டின் டோல் தெரிவிக்கையில், தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளான லூயிஸ், காவல்துறையினர் வந்து கைது செய்தபோது சுயநினைவின்றி இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, லூயிஸ் தாக்கப்படுவதாக வந்த தகவல்களை அடுத்து, அங்கு சென்ற காவல்துறை மற்றும் மருத்துவ உதவியாளர்களை சுமார் 200 பேர் கொண்ட குழு தாக்கியதாகவும் டோல் கூறியுள்ளார்.

அவசர சேவைப் பணியாளர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். மேலும், காவல்துறை வாகனத்திற்குத் தீ வைக்க முயன்றதற்காகக் குறைந்தது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் அடையாளத்தையும் மரணத்திற்கான காரணத்தையும் உறுதி செய்வதற்கான தடயவியல் சோதனை வெள்ளிக்கிழமை தொடரும் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |