சமையலறை மேஜையில் பிறந்து, பல்வேறு தடைகளைத் தாண்டி பிரித்தானிய மகாராணியாரின் அன்புக்கு பாத்திரமான இளவரசர் பிலிப்பின் அசாதாரண வாழ்க்கை வரலாறு
பிரித்தானிய மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப், தனது 99ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
கிரீஸ் நாட்டில் பிறந்து, பிரித்தானிய மகாராணியாரின் அன்புக்கு பாத்திரமான இளவரசர் பிலிப்பின் அசாதாரண வாழ்க்கை வரலாற்றை இங்கே பார்க்கலாம்.
1921ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி கிரீஸ் தீவுகளில் ஒன்றான Corfu தீவில், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசி ஆலிஸ்க்கு மகனாக பிறந்தார் இளவரசர் பிலிப். சமையலறையிலுள்ள ஒரு மேஜைதான் பிரசவ கட்டிலாக பயன்படுத்தப்பட்டது.
இளவரசராக பிறந்தும் வாழ்க்கை ராஜ வாழ்க்கையாக அமையவில்லை அவருக்கு. கிரீஸ் இராணுவத்தில் லெப்டினண்ட் ஜெனரலாக பதவி வகுத்த பிலிப்பின் தந்தையான ஆண்ட்ரூ, போரில் துருக்கியிடம் தோல்வியடைந்து தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டதால் அவரது குடும்பம் நாட்டை விட்டே ஓட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டது. போர்க்கப்பல் ஒன்றில் ஒரு குழந்தையாக ஆரஞ்சுப் பழங்கள் வைக்கும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு கிரீஸிலிருந்து தப்பி பாரீஸ் வந்து சேர்ந்தது பிலிப்பின் குடும்பம்.
தாய் மன நல மருத்துவமனையில், தந்தை எப்போதாவதுதான் வீட்டுக்கு வருவார் என்ற நிலையில், வெவ்வேறு உறவினர்கள் வீட்டில் வாழவேண்டிய சூழல் பிலிப்புக்கு.
10 வயதில் ஒரு அநாதையைப்போல பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட பிலிப், தான் அனுபவித்த துயரங்கள் தன்னை மேற்கொள்ள அனுமதிக்கவேயில்லை.
21 வயதில் பிரித்தானிய கடற்படையில் இணைந்து, இரண்டாம் உலகப்போரின்போது தனது பங்களிப்பிற்காக பெரிதும் பாராட்டப்பட்டவர் பிலிப்.
1943ஆம் ஆண்டு தன் உறவினர் ஒருவருடன் பார்ட்டி ஒன்றுக்காக சென்ற பிலிப், பிரித்தானியாவிலுள்ள விண்ட்சர் மாளிகையில் தங்க நேர்ந்தது. அங்குதான் இளவரசி எலிசபெத்தை சந்தித்தார் பிலிப்.
பெற்றோர் சம்மதத்துடன் 1947ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 20ஆம் திகதி, இளவரசி எலிசபெத்தை கரம்பிடித்தார் பிலிப்.
1952ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6ஆம் திகதி, மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் உயிரிழக்க, இளவரசி எலிசபெத் பிரித்தானிய மகாராணியாக பதவியேற்றுக்கொண்டார். பிலிப் எலிசபெத் தம்பதிக்கு சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ மற்றும் எட்வர்ட் என நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள்.
பல உடல் பிரச்சினைகளையும் விபத்துக்களையும் சமாளித்தவரான இளவரசர் பிலிப், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதைத்தொடர்ந்து ஏற்பட்ட தொற்றுக்காக பிப்ரவரி மாதம் 16ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இம்மாதம் மீண்டும் தன் அன்பு மனைவியுடன் இணைந்துகொண்ட இளவரசர் பிலிப், இன்று இயற்கை எய்தியுள்ளார்.
இளவரசர் பிலிப், எலிசபெத் மகாராணியாரின் காதல் உலகறிந்தது. அன்புக் கணவரை இழந்த மகாராணியார் அதை எப்படி தாங்கிக்கொள்ளப்போகிறாரோ தெரியவில்லை!




