ஜேர்மனி போன்ற நிலை பிரித்தானியாவுக்கும் வரலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்
கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனால், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகள் போன்று கடும்போக்கு நடவடிக்கை முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக பிரித்தானியா நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாத மக்களுக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்றுகளின் திடீர் அதிகரிப்புக்கு பதிலளிக்க முடியாமல் ஐரோப்பாவில் உள்ள அரசாங்கங்கள் போராடுகையில், குறித்த நாடுகளின் கவனம் மொத்தம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்துவதில் உள்ளது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்திரியாவில் தனிப்பட்ட காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2 மில்லியன் மக்கள் உணவுக்கு அல்லது வேலைக்கு அல்லாமல் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதே கடும்போக்கு நடவடிக்கைகள் இன்னும் சில தினங்களில் ஜேர்மனியிலும் அமுலுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதனால் மக்கள் பொதுப்போக்குவரத்தில் பயணிக்கவோ, உணவகங்கள், உள்ளிட்டவைகளில் நுழையவோ முடியாமல் போகும்.
இதே நிலை, பிரித்தானியாவுக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார் நிபுணர் ஒருவர். நம்மால் முயன்ற ஒத்துழைப்பை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னெடுத்தால், அதுபோன்ற கடும்போக்கு நடவடிக்கைகளில் இருந்து நாம் தப்ப முடியும் என்கிறார் அவர்.
நாம் மீண்டும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும், தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் மட்டுமின்றி, தடுப்பூசி கடவுச்சீட்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது மனித உரிமைகள் பற்றியது அல்ல, இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவது பற்றியது என அவர் விளக்கமளித்துள்ளார்.
ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தற்போதைய சூழலில் தேவையானது என குறிப்பிட்டுள்ள அவர், பொதுநலன் கருதி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்றார்.