தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிரித்தானியர்களால் தான் இந்த நிலை: சுகாதார செயலாளர் காட்டம்
பிரித்தானியாவில் வேண்டுமென்றே கொரோனா தடுப்பூசியைப் பெறாதவர்கள் தான் மருத்துவமனை படுக்கைகளை தற்போது ஆக்கிரமித்து வருவதாக சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரித்தானிய மக்களில் தடுப்பூசி பெறாதவர்கள் தான் எஞ்சிய மக்களில் பாதிப்பை ஏற்படுத்திவருவதாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிரித்தானியர்களில் தகுதியுடைய 10% மக்கள், அதாவது 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. தற்போது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையை நாடும் 10ல் 9 பேர்கள் வேண்டுமென்றே தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவர்களால் எஞ்சிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் நான் மிகைப்படுத்திக் கூற விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள சஜித் ஜாவித், சமூகத்திற்கு அவர்கள் விளைவிக்கும் கேடு தொடர்பில் அவர்கள் கட்டாயம் உணர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைப் படுக்கைகள், இருதய நோயாளி ஒருவருக்கு ஒதுக்கப்பட வேண்டியதாக இருந்திருக்கலாம். அல்லது அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒரு நோயாளிக்கு ஒதுக்கப்பட வேண்டியதாக இருக்கலாம்.
தம்மையும், தாம் சார்ந்த சமூகத்தையும் பாதுகாக்க வேண்டியவர்கள், கடமையை மறந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் தவிர்க்கிறார்கள் என சஜித் ஜாவித் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என இனிமேலும் நாம் கெஞ்சுவதாக இல்லை என குறிப்பிட்டுள்ள சஜித் ஜாவித், சமூகத்திற்கு இவர்கள் இழைக்கும் தீங்கை உணர்ந்து கொண்டாலே போதும் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தை பொறுத்தமட்டில் தகுதியுடைய மக்களில் 9% பேர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். வேல்ஸ்(10%), பிரித்தானியா(11%) வடக்கு அயர்லாந்து(14%) என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக மக்களில் சிலருக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பண்டிகை நாட்களில் மக்கள் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித்.