எந்த நேரமும் வேலையைவிட்டு நீக்கப்படும் நிலையில் 60,000 பிரித்தானியர்கள்
பிரித்தானியாவில் முதியோர் காப்பகங்களில் பணியாற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60,000 ஊழியர்கள் வேலையை இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 11ம் திகதிக்குள் முதியோர் காப்பகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதார செயலர் தெரிவித்திருந்த நிலையிலேயே, வேலையை இழக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய சுகாதார செயலர் சஜித் ஜாவித் தெரிவிக்கையில், NHS முன்கள பணியாளர்கள் நவம்பர் 11ம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், அல்லது வேலையை இழக்க நேரிடும் என்றார்.
பொதுவாக சமீப மாதங்களில் கடுமையான ஊழியர்கள் பற்றாக்குறையால் அல்லல்பட்டுவரும் முதியோர் காப்பகங்கள், சஜித் ஜாவிதின் தடுப்பூசி தொடர்பான எச்சரிக்கை மேலும் பீதியை கிளப்பியுள்ளது.
இதனால் எதிர்வரும் மாதங்களில் முதியோர் காப்பகங்கள் முழுமையாக செயல்படுமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், தடுப்பூசி காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது முன்வைக்கப்படுகிறது.
ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் காப்பகங்கள், மொத்தமாக 60,000 ஊழியர்களை இழக்க நேர்ந்தால், கண்டிப்பாக ஸ்தம்பித்துவிடும் என்கிறார்கள் தொடர்புடைய நிர்வாகிகள்.
வெளியாகும் தரவுகளின் அடிப்படையில், சுகாதாரத்துறையின் தடுப்பூசி காலக்கெடுவால் 40,000 முதல் 70,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.