தடுப்பூசி போடாத சுவிஸ் மக்களுக்கு அக்டோபர் முதல் புதிய சிக்கல்
சுவிட்சர்லாந்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றே கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு அடுத்த இரண்டு வார காலம் மட்டுமே இலவசமாக கொரோனா சோதனை முன்னெடுக்கப்படும் எனவும், அக்டோபர் 10ம் திகதிக்கு பின்னர் சொந்த பணத்தில் கொரோனா சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும் என பெடரல் கவுன்சில் முடிவுக்கு வந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் வெளிவர தடுப்பூசி மட்டுமே தீர்வு என்பது பெடரல் கவுன்சில் உறுதியாக உள்ளது என்பது மட்டுமல்ல, இதுவரையான தரவுகள் அனைத்தும் அதையே நிரூபணம் செய்வதாக உள்ளது என சுவிஸ் சுகாதார அமைச்சர் Alain Berset தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆனால் பெடரல் கவுன்சிலின் கடும்போக்கு நடவடிக்கை தங்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முடிவுக்கு கொண்டு செல்லாது என்றே மக்களில் பல பேர் தெரிவிக்கின்றனர்.
பெடரல் கவுன்சில் தங்களை இன்னொரு ஊரடங்கு நடவடிக்கைக்கு தள்ளுவதாக தடுப்பூசிக்கு எதிரானவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தம்மால் இனி பிடித்தமான ஒரு உணவகத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். ஆனால் நீண்ட நாள் சோதனைக்காக தம்மை இரையாக்க முடியாது என சுவிஸ் இளைஞர் ஒருவர் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளுக்கு தாம் எதிரானவன் அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை அரசு அல்லது மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள அனைத்து தடுப்பூசிகளும் தாம் போட்டுக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் கொரோனா தடுப்பூசியானது போதுமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல மனிதர்களுக்கு பயன்பாட்டுக்கு உகந்ததா என்பது தொடர்பில் எழும் சந்தேகங்களை பூர்த்தி செய்யவும் இல்லை என்கிறார்.
தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானது என அரசாங்கம் உறுதி அளிக்கிறது என்றால், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் அந்த 28 வயது இளைஞர்.