பிரித்தானியாவில் பிரபல ஸ்நாக்ஸ் சாப்பிட்ட சுமார் 200 பேருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு: கனடாவிலும் இதே நிலை
பிரித்தானியாவில் பிரபலமாக விற்கப்படும் ஸ்நாக்ஸ் ஒன்றை உண்டதால் சுமார் 200 பேர் வரை உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tayto Group என்னும் நிறுவன தயாரிப்பான Mr. Porky brand Scratchings என்னும் பன்றி இறைச்சியால் தயாரிக்கப்படும் உணவுதான் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஸ்நாக்சில் சால்மோனெல்லா என்னும் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது. இந்த சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி உணவை பாதித்துள்ளதை வெறும் கண்களால் பார்த்தால் கண்டுபிடிக்க முடியாது. அந்த கிருமி குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் ஆகியோருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தினால், அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான உடல் நிலை கொண்டவர்கள், இந்த கிருமி தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, தலை சுற்றல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடும்.
தற்போது குறிப்பிட்ட சில ஸ்நாக்ஸ் (பிப்ரவரி 2022 காலாவதி திகதி கொண்ட) பாக்கெட்களில் சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த உணவை திருப்பிக் கொடுத்துவிடுமாறு அந்நிறுவனம் தானே முன்வந்து மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியா முழுவதிலும் 179 பேருக்கு சால்மோனெல்லா கிருமி தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் ஜூரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 50 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நோய்த்தொற்று தொடர்பாக ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து பொது சுகாதாரத்துறைகளுடன் இணைந்து, இங்கிலாந்து பொது சுகாதாரத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், கனடாவிலும், Morgan Williams International Inc. என்னும் நிறுவன தயாரிப்பான Mr. Porky brand Original Scratchings என்னும் பன்றி இறைச்சி தொடர்பான ஸ்னாக்ஸ்களில் சால்மோனெல்லா என்ற நோய்க்கிருமி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அந்த உணவை திருப்பிக் கொடுத்துவிடவோ அல்லது தூர எறிந்துவிடவோ செய்துவிடுமாறு அந்நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.