மருத்துவ படிப்புக்காக தன் கால் விரலை துண்டித்த இளைஞர் - பின்னணியில் இருந்த காதல்
இளைஞர் ஒருவர் மருத்துவ படிப்பில் சேர்ந்து காதலியை திருமணம் செய்வதற்காக கால் விரல்களை துண்டித்துள்ளார்.
கால் விரல்கள் துண்டிப்பு
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கலீல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்காக படித்து வந்தார்.

அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வரும் நிலையில், மருத்துவ படிப்பில் சேர்ந்தால் தான் அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்ற நிர்பந்தத்தில் இருந்துள்ளார்.
ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதி மருத்துவப்படிப்பில் சேர முடியாத நிலையில், இந்த முறை எப்படியாவது மருத்துவப்படிப்பிற்கு தேர்ச்சி பெற்று விடவேண்டுமென்று சூரஜ் முயன்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 18 ஆம் திகதி காவல்துறையினரை அணுகி, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, தனது கால் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்தார்.
சூரஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், குற்றம் நடந்த இடம் மற்றும் மின்னணு தரவுகளை ஆய்வு செய்து மேற்கொண்ட விசாரணையில், சம்பவ இடத்தில் வேறு நபர்கள் யாரும் இருந்ததற்கான ஆதாரம் இல்லை.
மேலும், அவரது வீட்டில் ஊசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
மாற்றுத்திறனாளி சான்றிதழ்
சூரஜ் வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தி கொண்ட பிறகு, அறுவை இயந்திரம் மூலம் காலில் உள்ள பெரு விரல் தவிர 4 விரல்களை துண்டித்து கொண்டுள்ளார்.
கால் விரல்களை துண்டித்து மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முயற்சித்துள்ளார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தால், வழக்கத்தை விட குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலும், மருத்துவப்படிப்பிற்கு இடம் கிடைக்கும் என்பதால், மருத்துவப்படிப்பாகவும் அதன் மூலம் தனது காதலியை திருமணம் செய்வதற்காகவும் சூரஜ் இந்த விபரீத முயற்சியில் இறங்கியுள்ளார்.
தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுராஜ், குணமடைந்த பின்னர் சட்ட நடவடிக்கையும் எதிர்கொள்ள உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |