தம்பியை கடித்த பாம்பு - கன்னத்தில் 150 முறை அறைந்து உயிரை காப்பாற்றிய அண்ணன்
up man slaps brother 150 times after snake bite : தம்பியை பாம்பு கடித்ததால் சிகிச்சைக்காக அவர் சுயநினைவுடன் இருக்க அவரது கன்னத்தில் 150 முறை அறைந்து அவர் உயிரை காப்பாற்ற அவரது அண்ணன் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
பாம்பு கடித்த தம்பியை 150 முறை அறைந்த அண்ணன்
உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி பகுதியிலுள்ள ஜோதி நகரில் 21 வயதான அருண் என்பவர் தனது அண்ணனின் வயலில் பயிர்களுக்குத் தண்ணீர் ஊற்றச் சென்றிருந்தார்.

மதியம் சுமார் 2 மணியளவில், அருண் வைக்கோல் மூட்டையை எடுத்துக்கொண்டிருந்தபோது, அதற்குள் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது.
அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியதும் உடனடியாக அருணை அவரது சகோதரர் ஆகாஷ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
பாம்பு விஷம் அவரது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கத் தொடங்கியதால், அவர் மிகுந்த தூக்கக் கலக்கத்துடன் காணப்பட்டதுடன், அடிக்கடி கண்கள் மூடிக்கொண்டிருந்தார்.
சிகிச்சைக்கு அவர் விழித்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்கு அருவுறுத்தியதன்படி, அவர் கண் மூடும் போதெல்லாம் அவரது சகோதரர் கன்னத்தில் மீண்டும் மீண்டும் அறைந்து அவரை விழித்திருக்க வைத்தார்.
ஆகாஷ் சுமார் ஒரு மணி நேரத்தில் அருணை சுயநினைவுடன் வைத்திருக்க 150 முறைக்கு மேல் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
அருணின் உடல் முழுவதும் விஷம் கணிசமாகப் பரவியிருந்ததாகவும், 15 விஷமுறிவு ஊசிகளைச் செலுத்தியதாகவும் மருத்துவமனை குழுவினர் தெரிவித்தனர்.
தனது அண்ணன் கன்னத்தில் அறைந்து சுயநினைவுடன் வைத்திருந்ததாலும், மருத்துவர்களின் உடனடி சிகிச்சையாலும் அருண் ஆபத்தான கட்டத்திலிருந்து தாண்டி உயிர் பிழைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |