திருமணமாகி இரண்டே மாதங்கள்... பெற்றோர் உதவியுடன் கணவனைக் கொன்ற இளம்பெண்
திருமணமாகி இரண்டே மாதங்களில், தன் கணவரைக் கொலை செய்த இளம்பெண் ஒருவர், தன் பெற்றோர் உதவியுடன், அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக மற்றவர்களை நம்பவைக்கவும் முயன்றுள்ளார்.
திருமணமாகி இரண்டே மாதங்கள்...
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள பரேலி என்னுமிடத்தில், ஜித்தேந்திர யாதவ் என்பவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், மேலதிக விசாரணையில், அது திட்டமிடப்பட்ட கொலை என தெரியவந்துள்ளது.
பெற்றோர் உதவியுடன்...
தடயவியல் நிபுணர்களின் ஆய்வு மற்றும் உடற்கூறு ஆய்விலிருந்து யாதவ் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்ளவில்லை என தெரியவந்த நிலையில், பொலிசார் யாதவின் மனைவியான ஜோதியை விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
விசாரணையில், யாதவும் ஜோதியும் ஒன்பது ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணம் ஆன உடனேயே யாதவின் பூர்வீக சொத்தை விற்று தன் பெயரில் ஒரு வீட்டையும் காரையும் வாங்க ஜோதி யாதவை வற்புறுத்திவந்துள்ளார்.
இதற்கிடையில், யாதவ் ஒன்லைன் சூதாட்டத்தில் 20,000 ரூபாயை இழக்க, ஜோதி யாதவுடன் சண்டை போட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்ற, கணவரின் கழுத்தை நெறித்துள்ளார் ஜோதி, யாதவ் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
கணவன் உயிரிழந்ததை உணர்ந்த ஜோதி, பயந்துபோய் தன் பெற்றோரை அழைக்க, அவர்கள் உதவியுடன், மூன்று பேருமாக யாதவ் உடலை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டுவிட்டு, அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக நாடகம் ஆடியுள்ளார்கள்.
யாதவ் இறந்ததும், ஜோதி யாதவின் பெற்றோருக்கோ, மருத்துவமனைக்கோ அல்லது பொலிசாருக்கோ தகவல் கொடுக்காமல், தன் பெற்றோரை அழைத்துள்ளதும், ஜோதியின் உறவினர்கள் பலர் உடனடியாக அவரது வீட்டுக்கு வந்துள்ளதும் மொபைல் டேட்டா மூலமாக தெரியவரவே பொலிசாரின் சந்தேகம் ஜோதி குடும்பத்தினர் மீது திரும்பியுள்ளது.
ஜோதியும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபின் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |