புலம்பெயர்வோரை எல்லையிலேயே திருப்பி அனுப்ப வலியுறுத்தல்: ஜேர்மன் மக்கள் கருத்து என்ன?
ஜேர்மனியில் அரசியல்வாதிகள் சிலருக்கு புலம்பெயர்தல் எதிர்ப்பு கருத்துக்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயம்தான்.
ஆனால், சமீப காலமாக நிகழ்ந்த சில தாக்குதல்களின் பின்னணியில் புலம்பெயர்ந்தோர் இருப்பது தெரியவந்ததையடுத்து, மக்களுக்கும் புலம்பெயர்தல் எதிர்ப்பு கருத்துக்கள் உருவாகத் துவங்கியுள்ளன.
சிரிய அகதி நடத்திய தாக்குதல்
சமீபத்தில் சிரிய இஸ்லாமியவாதி ஒருவர் ஜேர்மனியின் Solingen நகரில் தாக்குதல் நடத்தியதில் மூவர் கொல்லப்பட்ட விடயம் அரசியல்வாதிகள் மட்டுமின்றி, பொதுமக்களின் கோபத்தையும் அதிகரித்துள்ளது.
ஜேர்மன் நாடாளுமன்றத்தின் பெரிய எதிர்க்கட்சிகளான Christian Democratic Union (CDU) மற்றும் Christian Social Union (CSU) ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டவிரோத புலம்பெயர்வோரை, எல்லையிலேயே திருப்பி அனுப்பிவிடவேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளனர்.
Image: Bernd Elmenthaler/IMAGO
மக்கள் கருத்து என்ன?
சரி, ஜேர்மன் மக்கள் புகலிடம், புலம்பெயர்தல் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக, இம்மாதம், அதாவது, செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் மக்களிடையே ஆய்வொன்று நடத்தப்பட்டது.
அரசு ஒளிபரப்பு நிறுவனமான ARD நடத்திய அந்த ஆய்வில், ஜேர்மனிக்குள் குறைந்த அளவிலான புலம்பெயர்ந்தோரை மட்டுமே அனுமதிக்கும் வகையில், நமக்கு அடிப்படையிலேயே வித்தியாசமான ஒரு புகலிடம் மற்றும் அகதிகள் கொள்கை தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அந்தக் கேள்விக்கு, ஆய்வில் கலந்துகொண்ட 77 சதவிகிதம் பேர் ஆம் என பதிலளித்திருந்தார்கள்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட முக்கால் வாசிப்பேரும், ஜேர்மன் எல்லைகளில் நிரந்தர கட்டுப்பாடுகளை உருவாக்கவேண்டும் என கூறியிருந்தார்கள்.
72 சதவிகிதம் பேர், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, புலம்பெயர்வோரின் மொபைல் முதலான தொலைதொடர்பு சாதனங்களை பரிசோதிக்கும் வகையில் அதிகாரத்தை அதிகரிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
48 சதவிகிதம்பேர், இன்றைய அரசியலில் அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் முக்கியமான பிரச்சினை என்று கூறியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இந்த ஆண்டில், ஏப்ரல் மாதத்தில் புலம்பெயர்தல் முக்கியமான பிரச்சினை என்று கூறியவர்களைவிட, தற்போது அப்படிக் கூறியவர்களின் எண்ணிக்கை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஆக, ஜேர்மனியில் பொதுமக்களுக்கும் புலம்பெயர்தல் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் உருவாகிவருகின்றன என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |