தடுப்பூசி எதிர்ப்பாளர்களால் கனடா அரசைக் கலைப்பது தொடர்பில் உலவும் தகவல்கள்: கவர்னர் ஜெனரல் வெளியிட்டுள்ள அவசர செய்தி
கட்டாய கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்கள், கனடாவின் கவர்னர் ஜெனரலுக்கு விண்ணப்பித்து பெடரல் அரசைக் கலைக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, கனடா அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பில் கவர்னர் ஜெனரல் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்யலாம் என்றும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் உலா வருகிறது.
இது குறித்து அவசர செய்தி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ள கனடா கவர்னர் ஜெனரலான Mary Simon, கவர்னர் ஜெனரல் அலுவலகத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் பெடரல் அரசைக் கலைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், பொதுமக்கள் கவர்னர் ஜெனரல் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கனடா அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பில் தங்கள் வாக்கை பதிவு செய்யலாம் என சில தவறான தகவல்கள் உலவுவது குறித்த செய்திகள் கவர்னர் ஜெனரலின் செயலரின் அலுவலகத்தின் கவனத்துக்கு வந்துள்ளதாகவும், அது தவறான தகவல் என்றும், அப்படி ஒரு நடைமுறை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெடரல் அரசைக் கலைக்கமுடியுமே ஒழிய, பொதுமக்களுக்கு அப்படி செய்வதற்கான நடைமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.