சிக்கலில் டொனால்ட் ட்ரம்ப்... திவாலாகும் அமெரிக்க நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்காவை வளப்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகள் மீது வரிகளை விதிக்க, தற்போது அந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு மட்டுமே பின்னடைவை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
திவாலாகும் நிறுவனங்கள்
ஏப்ரல் மாதம் வரி விதிப்பு அறிவிப்புக்குப் பிறகு, அமெரிக்காவில் திவாலாகும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் 71 நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை, 446 முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகிவிட்டன, இது 2020 ஆம் ஆண்டின் தொற்றுநோய் காலகட்டத்தை விட 12 சதவீதம் அதிகமாகும்.
மட்டுமின்றி, ஜூலை 2020க்குப் பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே அதிகபட்சமாக 71 நிறுவனங்கள் திவாலானதாக பதிவாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுப் பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 10 சதவீத வரி விதித்தது, ஆனால் அதே மாதத்தில் திவாலாகும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் உயரத் தொடங்கின.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், 371 பெரிய அமெரிக்க நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்துவிட்டன, ஜூன் மாதத்தில் மட்டும் 63 நிறுவனங்கள் திவால்நிலைக்குத் தாக்கல் செய்தன.
இதில், அமெரிக்க மக்களிடையே மிகப் பிரபலமான Forever 21, Joann’s, Rite Aid, Party City, Claire’s உள்ளிட்டவையும் அடங்கும். இதில் சிறு மற்றும் குறு தொழில்களே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பணவீக்கம் வேலையின்மை
2024 ஆம் ஆண்டின் இறுதியில், ரஸ்ஸல் 2000 நிறுவனங்களில் 43 சதவீதம் நஷ்டத்தில் செயல்பட்டன, இது 2020 க்குப் பிறகு மிக உயர்ந்த வீதமாகும். 2008 ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது கூட 41 சதவீதம் மட்டுமே பதிவாகியிருந்தது.
திவாலான நிறுவனங்களில் தொழில்துறையில் 70 நிறுவனங்கள், நுகர்வோர் விருப்பப்படி 61 நிறுவனங்கள், சுகாதாரப் பராமரிப்பில் 32 நிறுவனங்கள், நுகர்வோர் ஸ்டேபிள்ஸில் 22 நிறுவனங்கள், மென்பொருள் 21 நிறுவனங்கள், நிதித்துறையில் 13 நிறுவனங்கள் என பட்டியல் வெளிவரத்தொடங்கியுள்ளன.
வரிகள் பணவீக்கத்தையும் வேலையின்மையையும் மோசமாக்கக்கூடும். ஜூலை மாதத்தில், 11% சிறு வணிகங்கள் மிகவும் மோசமான விற்பனையைப் பதிவு செய்துள்ளன, இது அதிகரித்து வரும் வேலையின்மையின் குறியீடாகும்.
சிறு வணிகங்கள் 62.3 மில்லியன் மக்களை, அதாவது அமெரிக்க தொழிலாளர்களில் சுமார் 45.9% பேர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. மேலும், 20 முதல் 24 வயதுடைய இளம் அமெரிக்கர்களிடையே, கடந்த மூன்று மாதங்களில் வேலையின்மை சராசரியாக 8.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |