ஈரானுக்கு இன்னொரு நெருக்கடியை அளித்த அமெரிக்கா... முடக்கப்பட்ட 344 மில்லியன் டொலர்
ஈரானுடன் தொடர்புடையது என அமெரிக்க அதிகாரிகளால் நம்பப்படும் 344 மில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை ட்ரம்ப் நிர்வாகம் முடக்கியுள்ளது.
நிதித்துறை தடை
அமெரிக்க அதிகாரி ஒருவர், கருவூலத் துறை மற்றும் Tether ஆகியவற்றின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமுலில் இருக்கும் போர்நிறுத்தத்தின் போது அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தூதரக முயற்சிகள் முடங்கியுள்ள நிலையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முடக்கப்பட்ட சொத்துக்கள், மோதலிலோ அல்லது பேச்சுவார்த்தைகளிலோ ஈரானின் நிலையைப் பாதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், ஈரானுடன் தொடர்புடைய பல வாலெட்டுகள் மீது நிதித்துறை தடை விதிப்பதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
மட்டுமின்றி, ஈரான் நாட்டிற்கு வெளியே நகர்த்தத் தீவிரமாக முயன்று வரும் நிதியை பின்தொடர்வதுடன், ஈரானுடன் தொடர்புடைய அனைத்து நிதிசார் உயிர்நாடிகளையும் குறிவைப்போம் என்றும் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உலகம் முழுவதும் கிரிப்டோ பரிவர்த்தனைகளை எளிதாக்கும் டிஜிட்டல் நாணய நிறுவனமான 'Tether', இரண்டு முகவரிகளில் இருந்த 344 மில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோ நாணயங்களை முடக்க, அமெரிக்க அரசாங்கத்திற்கு உதவியதாக வியாழக்கிழமையன்று தெரிவித்தது.
மேலும், சட்டவிரோத நடத்தை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பல அமெரிக்க அதிகாரிகள் பகிர்ந்த தகவல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக Tether நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான், ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள், வருவாய் ஈட்டுவதற்கும் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்கும் ஒரு வழியாகக் கிரிப்டோகரன்சியை அதிகளவில் நாடி வருகின்றன.
எதுவும் செய்துவிடாது
கிரிப்டோ கண்காணிப்பு நிறுவனமான Chainalysis வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டில் ஈரானின் கிரிப்டோ இருப்புகள் 7.8 பில்லியன் டொலரை எட்டின.
மேலும், 2025-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், அந்த கிரிப்டோ சொத்துக்களில் ஏறக்குறைய பாதி ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினரிடம் இருந்தது என்றே தெரிவித்துள்ளனர்.

ஆனால், அமெரிக்காவின் இவ்வாறான அழுத்தங்கள் ஈரானை எதுவும் செய்துவிடாது என்றே நிபுணர்கள் தரப்பின் வாதமாக உள்ளது. ஈரான் பல தசாப்தங்களாகத் தடைகளுக்கு உள்ளாகியிருந்ததுடன், அதனைத் தகவமைத்துக் கொள்வதற்கான வழிகளையும் உருவாக்கியிருந்தது.
மட்டுமின்றி, தடைகள் விதிக்கப்பட்ட போதிலும் சில நாடுகள் ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தன. மேலும், தற்போதைய சூழலில் ஈரானை எதிர்கொள்வதற்கான வழிமுறை என்பது ஈரானுக்குத் துணை நிற்கும் மூன்றாம் தரப்புச் சக்திகளை, சீனா உட்பட, இலக்காகக் கொள்வதே ஆகும்.
ஏனெனில் ஈரான் ஏற்கனவே கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு முழுமையாக ஆளாகிவிட்டது என்றே நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |