முடங்கியது அமெரிக்க அரசு... லட்சக்கணக்கான பணியாளர்கள் பாதிக்கப்படும் அபாயம்
அமெரிக்க அரசின் நிதிப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாததால் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது.
இதனால், லட்சக்கணக்கான ஃபெடரல் ஊழியர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
முடங்கியது அமெரிக்க அரசு...
சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க அரசு மீண்டும் முடங்கியுள்ளது.
அமெரிக்காவின் புதிய நிதியாண்டு, இன்று, அதாவது, அக்டோபர் மாதம் 1ஆம் திகதி துவங்குகிறது. அரசாங்கம் செயல்படுவதற்குத் தேவையான நிதி மசோதாக்களை காங்கிரஸ் நிறைவேற்றியாகவேண்டும்.
இந்நிலையில், மருத்துவத்துறைக்கான செலவுகள் தொடர்பில் குடியரசுக் கட்சி ஒரு திட்டத்தை முன்வைக்க, அதை ஏற்க மறுத்து ஜனநாயகக் கட்சி மற்றொரு திட்டத்தை முன்வைத்தது.
இரு கட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், எந்த தற்காலிக நிதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
ஃபெடரல் ஏஜன்சிகள், காங்கிரஸ் ஒப்புக்கொண்ட நிதியைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆக, நிதி ஒதுக்கப்படவில்லையென்றால் ஏஜன்சிகள் இயங்கமுடியாது, அவை முடக்கப்படும். எனவேதான், அமெரிக்க அரசு முடங்கியுள்ளது.
என்ன பாதிப்பு ஏற்படும்?
அரசு முடங்கினால், அத்தியாவசியப் பணிகள் அல்லாதவை என கருதப்படும் அனைத்து பணிகளும் ஸ்தம்பித்துவிடும்.
லட்சக்கணக்கான ஃபெடரல் ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் அல்லது பணிநீக்கம் செய்யபடுவார்கள்.
தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுச்சேவைகள் மூடப்படும். சில உணவு பாதுகாப்புச் சோதனைகள், ஆய்வுகள் மற்றும் புலம்பெயர்தல் விசாரணைகள் தாமதமாகும்.
இந்தப் பணிகள் முடங்குவதால், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி குறையவும் பாதிப்பு உள்ளது.
ட்ரம்ப் இதற்கு முன் ஜனாதிபதியானபோதும், 2018 டிசம்பர் முதல் 2019 ஜனவரி வரை அமெரிக்க அரசு முடங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |