அசாதாரண சூழ்நிலை... அமெரிக்காவில் நாடு தழுவிய விமான சேவைகள் நிறுத்தம்
FAA orders rare nationwide ground stop at all US airports: அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களிலும் விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்குமாறு, அரிதானதொரு உத்தரவை FAA பிறப்பித்துள்ளது.
அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, அமெரிக்காவின் அனைத்து விமானங்களுக்கும் நாடு தழுவிய அளவில் தரையிறங்கும் உத்தரவை (ground stop) ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அதிக போக்குவரத்து கொண்ட பல பகுதிகளில் ரேடியோ அலைவரிசைச் செயல்பாட்டில் வழக்கத்திற்கு மாறான தடங்கல் ஏற்பட்டுள்ளது; இதன் விளைவாக அனைத்து விமான நிலையங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் கட்டளை மையம் (ATCSCC), அமெரிக்க விமானங்களை உடனடியாக நிறுத்துவதற்கான காரணம் குறித்து பிற்பகல் 3:54 மணிக்கு (ET) தெரிவிக்கையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையே இதற்குக் காரணம் என்று குறிப்பிட்டது.
சிகாகோவின் ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு உபகரணங்கள் செயலிழந்ததாலும், தகவல் தொடர்பு சிக்கல்கள் ஏற்பட்டதாலும்தான் ஆரம்பகட்டப் பிரச்சினைகள் தொடங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் புறப்படவிருக்கும் அனைத்து விமானங்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை முடக்கப்பட FAA உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த விமானச் செயல்பாட்டுத் தடை இரவு 11 மணி வரை நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
நெருக்கடி முடியும் வரை, அமெரிக்காவை நோக்கிச் செல்லும் சர்வதேச விமானங்கள் ஒவ்வொரு விமானத்தின் நிலைக்கேற்ப கையாளப்படும். சில விமானங்கள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள இடங்களுக்கு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை.
அமெரிக்கப் போக்குவரத்துச் செயலர் ஷான் டஃபி, மாலை 4.16 மணிக்கு விமானங்கள் நிறுத்தப்பட்டதை உறுதிசெய்தார். அனைத்து வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களையும் பாதித்த ஒரு தகவல் தொடர்புச் சிக்கலைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சைபர் தாக்குதல்
FAA-இன் விமானப் பயணங்களுக்கான அறிவிப்பு (NOTAM) அமைப்பில் ஏற்பட்ட கோளாறைத் தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து புறப்படும் விமானங்களுக்கு நாடு தழுவிய சேவை நிறுத்தம் கடைசியாக ஜனவரி 11, 2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.
மட்டுமின்றி, 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-அன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மொத்த விமானங்களும் தரையிறக்கப்பட்டன மற்றும் அமெரிக்க வான்வெளி மூடப்பட்டது.

இதனிடையே, வாஷிங்டன் எக்ஸாமினரைச் சேர்ந்த அன்னா கியாரிடெல்லி என்பவர் தெரிவிக்கையில், இந்தப் பிரச்சினை அமெரிக்கா மீதான சாத்தியமான சைபர் தாக்குதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று FAA ஊழியர்கள் அஞ்சுவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு தழுவிய அளவில் 'ATC Zero' (விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுச் சேவை முற்றிலும் முடங்கிய நிலை) அறிவிக்கப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகும்; நவீன விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது மிகச் சில முறைகளே நிகழ்ந்துள்ளது.